வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில்,முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் தீவிரம் : அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் நேரில் ஆய்வு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில்,முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் தீவிரம் : அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் நேரில் ஆய்வு

திங்கள் , டிசம்பர் 07,2015,

கனமழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள், இப்பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவின்பேரில் மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் ஒருங்கிணைந்து, முழு வீச்சில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகளை அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களிலும் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் பர்மா நகர், சடையன்குப்பம் பகுதிகளில், அமைச்சர் திரு. ஓ. பன்னீர் செல்வம் படகில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆவின்பால், ரொட்டி மற்றும் குடிநீர் பாட்டில்களை வழங்கினார். மேலும் ராஜா சண்முகம் நகர், ஜோதி நகர், சத்தியமூர்த்தி நகர் பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

பூந்தமல்லியை அடுத்த புதுசத்திரம், ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை, அமைச்சர்கள் திரு. ஓ. பன்னீர்செல்வம், திரு. எடப்பாடி கே. பழனிசாமி, திரு. B.V. ரமணா, திரு. எஸ். அப்துல் ரஹீம், மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு, சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்தினர். மேலும், நெமிலி பகுதியில் தொடர் மழையினால் வீடுகள் பாதிக்கப்பட்ட 64 குடும்பத்தினருக்கு தலா 4,100 ரூபாய், 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

நெய்வேலி கிராமத்தில் 250 குடும்பத்தினருக்கு அரிசி, வேட்டி, சேலை, ரொட்டி உள்ளிட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

திருவொற்றியூர் சண்முகாபுரம், டி.கே.எஸ். நகர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால், ரொட்டி, போர்வை, வேட்டி, சேலை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சென்னை மாநகரில், 114 முகாம்களில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி ஊழியர்கள் தரமான உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்றவற்றை வழங்கி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெறப்பட்ட உணவு மற்றும் நிவாரணப் பொருட்களும், விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல்களில் அனுப்பப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

மழை வெள்ளத்தினால் சேதமடைந்த காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனூர்-ஊரப்பாக்கம் சாலை, போர்க்கால அடிப்படையில் 24 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்டு, மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. அமைச்சர் P. தங்கமணி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர், இப்பணிகளை பார்வையிட்டனர்.

இரும்புலிச்சேரி தரைப்பாலம், பாலாற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரும்புலிச்சேரி, இடையாத்தூர் கிராம மக்களின் பயன்பாட்டிற்காக மோட்டார் பொருத்திய கட்டணமில்லா படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் உள்ள கூட்டுறவு நியாய விலை கடைகளுக்கான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் படகுகள் மூலம் கொண்டுசெல்லப்பட்டன. இதனால் பல்வேறு இடங்களிலும் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.