கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ,அ.இ.அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன

கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ,அ.இ.அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன

திங்கள் , டிசம்பர் 07,2015,

கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு உதவிடும் வகையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, திருப்பூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், 3 கோடி ரூபாய் மதிப்பிலான பனியன்கள், நைட்டிகள், போர்வைகள், குழந்தைகளுக்கான ஆடைகள், உணவுப் பொருட்கள், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவைகளை 15 லாரிகள் மூலம் அமைச்சர் திரு. எம்.எஸ்.எம். ஆனந்தன் அனுப்பி வைத்தார்.

ஈரோடு மாவட்டம், ஈரோடு, பெருந்துறை, சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5 லாரிகளில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் ஒரு லட்சம் போர்வைகள் மற்றும் 25 ஆயிரம் உடைகள் ஆகியவை அனுப்பிவைக்கப்பட்டன. அமைச்சர் திரு. தோப்பு N.D.வெங்கடாசலம், இந்த லாரிகளை ஆய்வு செய்து அனுப்பிவைத்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாவட்ட மக்களுக்காக உடுமலைப்பேட்டை நகராட்சி சார்பில் உணவுப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் போர்வை உட்பட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. சட்டப்பேரவை துணை சபாநாயகர் திரு. பொள்ளாச்சி ஜெயராமன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத் தலைவர் திரு. உடுமலை கே. ராதாகிருஷ்ணன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

தாராபுரம் நகராட்சி சார்பில், கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் 10 ஆயிரம் சப்பாத்திகள் தயார் செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டன. சட்டப்பேரவை துணை சபாநாயகர் திரு. பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் பார்வையிட்டு அனுப்பி வைத்தனர்.

திருச்சி மாநகராட்சி சார்பில், பால் பவுடர், பாய், உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்கள் லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அரசு தலைமை கொறடா திரு. ஆர். மனோகரன் உள்ளிட்டோர் இப்பொருட்களை அனுப்பிவைத்தனர்.

மதுரை மாநகராட்சி சார்பில், கடலூரில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான பால், குடிநீர், போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. மேயர் திரு. ராஜன் செல்லப்பா மற்றும் மாநகராட்சி ஆணையர் இப்பொருட்களை அனுப்பிவைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, குடிநீர், ரொட்டி மற்றும் துணிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் லாரி மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.

வேலூர் மாவட்டம் ஆற்காடு சட்டமன்றத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. சார்பில், உணவுப் பொட்டலங்கள், பால் பாக்கெட்டுகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்கள், சென்னைக்கு லாரி மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.

கரூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பால் பவுடர், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் 5 லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகர மக்களுக்காக, நெல்லை மாநகராட்சி சார்பில், நிவாரண பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. மேலும், 10 நடமாடும் மருத்துவக் குழுக்களும் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், கோத்தகிரியில் இருந்து 6 ஆயிரம் ரொட்டிகள், 4 ஆயிரம் தண்ணீர் பாட்டில்கள், 2 ஆயிரம் கிலோ தேயிலைத் தூள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள், லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், உதகை மார்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில், 20 டன் மலை காய்கறிகள், 2 லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கே.ஆர். அர்ஜுனன், தாட்கோ தலைவர் திரு. ஆர். கலைச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்கள், தரம் பரிசோதிக்கப்பட்டு, மண்டலம் வாரியாக, 15 மண்டலங்களுக்கு 14,800 குடும்பங்களுக்கான உணவுப் பைகள் அனுப்பப்பட்டன. பிஸ்கட்ஸ், தண்ணீர், பால், மெழுகுவர்த்தி, காபி, டீத்தூள், பேரிச்சம்பழம் ஆகிய பொருட்கள் இந்தப் பைகளில் இடம் பெற்றுள்ளன.

அரியலூர் மாவட்ட அ.இஅ.அ.தி.மு.க. சார்பில், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான போர்வை, கம்பளி, கொசுவர்த்தி, மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல், பெரம்பலூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், 15 ஆயிரம் கிலோ காய்கறிகள், 8 ஆயிரம் வேட்டி, சேலைகள், ஆயிரம் கிலோ பால் பவுடர் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, ஆந்திர மாநில அ.இ.அ.தி.மு.க. சார்பில், சென்னையில் M.M.D.A. காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, ரொட்டி மற்றும் போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வேன்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டன.