வெள்ளப்பெருக்கு காரணமாக நீரில் மூழ்கியும், சுவர் இடிந்து விழுந்தும் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : தலா 4 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 24 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கவும் உத்தரவு

வெள்ளப்பெருக்கு காரணமாக நீரில் மூழ்கியும், சுவர் இடிந்து விழுந்தும் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : தலா 4 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 24 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கவும் உத்தரவு

வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நீரில் மூழ்கியும், சுவர் இடிந்து விழுந்தும் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா 4 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 24 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கடந்த 9-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெம்பகரை கிராமத்தைச் சேர்ந்த திரு. பிரபாகரன் என்பவரின் மகன் கோட்டீஸ்வரன்;

நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. ஏழுமலை என்பவரின் மகன் கருணாமூர்த்தி;

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் அருகே மதுரை தெற்கு, கான்பாளையத்தைச் சேர்ந்த திரு. ராஜகோபாலன் என்பவரின் மகன் ஆத்மாராவ்; ஆகியோர் வெள்ளப் பெருக்கின் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்டம், ஐயம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த திரு. சிவா என்பவரின் மகள் மௌலிஸ்ரீ மழையின் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தாள் என்ற செய்தியையும்;

நேற்று வேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டம், துர்க்கம் கிராமத்தைச் சேர்ந்த திரு. மார்கண்டன் என்பவரின் மகன் முனுசாமி; காஞ்சிபுரம் மாவட்டம், நத்தப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த திரு. ஏகாம்பரம் என்பவரின் மகன் சின்னபையன்; ஆகியோர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயரமடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த மேலும் 6 நபர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.