வெள்ளம் பாதித்த பகுதிகளில் மறுசீரமைப்பு பணியை தமிழக அரசு விரைவாக மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாராட்டு

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மறுசீரமைப்பு பணியை தமிழக அரசு விரைவாக மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாராட்டு

ஞாயிறு, ஜனவரி 03,2016,

சென்னை : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சிறப்பான நிவாரண உதவிகளை செய்து வருவதாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மழை வெள்ளத்தால் குடிசைகளை இழந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்ட மொத்தம் 5,750 கோடி ரூபாய் வழங்கவேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே பிரதமரிடம் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி செல்லும் வழியில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில்,

முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ள நிவாரணப் பணிகளை திறமையாகக் கையாண்டுள்ளதாகவும், முதல்கட்டமாக மீட்பு நடவடிக்கைகள் முடிந்து விட்டதாகவும், தற்போது மறுவாழ்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். முதலமைச்சர் கோரியபடி, மத்திய அரசு, வீடுகளை இழந்த மக்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யும் என அவர் குறிப்பிட்டார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தர மாநில அரசிடமிருந்து எந்தக் கோரிக்கை வந்தாலும் அதனை மத்திய அரசு சாதகமாக பரிசீலிக்கும். ஏழை-எளிய மக்களுக்கு வீட்டு வசதி செய்து தருவதைப் பொறுத்தவரை, குடிசைகளை இழந்த மக்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யும். தமிழக அரசு நிவாரணப் பணிகளை திறமையாகக் கையாண்டுள்ளது. முதல்கட்டமாக மீட்புப் பணிகளை செய்து முடித்துள்ளது. தற்போது, மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கு சிறிதுகாலம் பிடிக்கும். ஒரே நாளில் இதை செய்து முடித்துவிட முடியாது என்று அவர் தெரிவித்தார்.