வெள்ளம் பாதித்த மக்களுக்கு 30,000 மெட்ரிக் டன் அரிசி, 19,100 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

வெள்ளம் பாதித்த மக்களுக்கு 30,000 மெட்ரிக் டன் அரிசி, 19,100 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

சனி, டிசம்பர் 19,2015,

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை, வழக்கத்தை விட அதிக அளவு பெய்து இருப்பதை தாங்கள் அறிவீர்கள். இந்த பலத்த மழையால் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க் கையில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளானார்கள்.
தமிழ்நாட்டில் மழையால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை மத்திய அரசு, ‘‘மிகப் பெரிய இயற்கை பாதிப்பு’’ என்று அறிவித்துள்ளது.

தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மத்திய அரசின் படை களுடன் ஒருங்கிணைந்து மீட்புப்பணிகளையும் நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டுள்ளது. குடிசை இழந்தவர்கள், கால் நடை இழந்தவர்கள் மற்றும் உயிரிழப்பை சந்தித்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பலத்த மழையால் வீடு களுக்குள் வெள்ளம் புகுந்த தால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் பல நாட்கள் தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட் டது. அவர்களது உடமை களுக்கு கடும் சேதம் ஏற்பட் டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவ தமிழக அரசு 7,150 நிவாரண முகாம்களை திறந்தது. இதன் மூலம் 19.63 லட்சம் பேருக்கு தினமும் உணவு வழங்கப் பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1.35 கோடி உணவுப் பொட்டலங்களை மாநில அரசு வினியோகம் செய்தது. பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் குடியமர்த்தும் பணிகள் தொடங்கப்பட் டுள்ளது. அவர்களுக்கு மாநில பேரழிவு நிதி உதவி விதியின் கீழ் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நிவாரண முகாம்களில் வழங்கப்பட்ட உணவு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்ட உணவு மற்றும் வெள்ள நிவாரண திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள அரிசி அளவு ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டால் 30 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழக்கமாக வழங்கப்படும் அரிசி அளவை விட நிவாரண பணிகளுக்கான இந்த கூடுதல் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டியது அவசியமானதாகும்.

தற்போதைய அவசர தேவையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் பொது வினியோக திட்டத்துக் காக இருப்பு வைக்கப்பட் டுள்ள அரிசியை எடுத்து பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் பணியை தொடங்குமாறு நான் அதிகாரி களுக்கு உத்தரவிட்டுள்ளேன். எனவே தாங்கள் உடனடியாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகத்தை அறிவுறுத்தி, தமிழ்நாட்டுக்கு சிறப்பு ஒதுக்கீடாக, வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர் களுக்கு வழங்கும் விலையில் 30 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பெரும்பாலான மக்கள், குறிப்பாக நகர்ப்பகுதிகளில் குடிசைகளில் வாழ்பவர் களும், கிராமங்களில் வாழ்பவர்களும் சமையல் செய்ய பெரும்பாலும் மண் எண்ணையை பயன்படுத்து கிறார்கள். வெள்ளப்பெருக்கு காரணமாக பலரது வீடு களில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை இழந்து விட்டனர்.
தொடர்மழை காரணமாக அவர்கள் சமையல் செய்ய விறகுகளும் கிடைக்க வில்லை.

இந்த நிலையில் தமிழ் நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப் படும் மண்எண்ணை அளவு நிர்ணயிக்கப்பட்டதை விட மிகவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு, குறிப்பாக சமையல் கியாஸ் சிலிண்டர் களை இழந்தவர்களுக்கு போதுமான அளவுக்கு மண் எண்ணை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமான மழை பெய்ததால் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் சுமார் 38.20 லட்சம் வீடுகளில் சமையல் கியாஸ் இணைப்பை இழந்துள்ளனர். இந்த 38.20 லட்சம் குடும்பங்களுக்கும் 19,100 கிலோ லிட்டர் மண்எண்ணை கூடுதலாக தேவைப்படுகிறது.

எனவே தாங்கள் உடனே பெட்ரோலியம் அமைச்சகத் துக்கு உத்தரவிட்டு, தமிழ் நாட்டுக்கு வழக்கமாக பொது வினியோக திட்டத் துக்கு வழங்கும் மண் எண்ணை அளவை விட கூடுதலாக 19,100 கிலோ லிட்டர் மண்எண்ணையை ஒதுக்கீடுக்கு ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த கூடுதல் மண்எண்ணை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது வினியோகத் திட்டவிலையில் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள அழிவு மற்றும் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் அரிசி மற்றும் கூடுதல் மண்எண்ணை ஒதுக்கீடு செய்ய உணவு அமைச்சகத் துக்கும், பெட்ரோலிய அமைச்சகத்துக்கும் தங்கள் உத்தரவிட்டு உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்- அமைச்சர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.