வெள்ளம் வடிந்த பகுதிகளில் நோய் பரவாமல் இருக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

வெள்ளம் வடிந்த பகுதிகளில் நோய் பரவாமல் இருக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

வியாழன்,நவம்பர்,26-2015

 

சென்னை,

வெள்ளம் வடிந்த பகுதிகளில் நோய் பரவாமல் இருக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை நடவடிக்கை கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. தற்போது வெள்ளம் வடிந்த பகுதிகளில் நோய் பரவாமல் இருக்க தமிழக அரசு சார்பில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:–மழை முடிந்து வெயில் அடிக்க ஆரம்பித்து விட்டது. இதைத்தொடர்ந்து காலரா, வாந்திபேதி, டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது?

பதில்:–முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி, சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 236 மருத்துவ முகாம்கள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடமாடும் மருத்துவ முகாம் மூலமும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர மாநிலம் முழுவதும் சராசரியாக 1,116 முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. சராசரியாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் மக்கள் பயன் பெற்று செல்கிறார்கள்.

நிலவேம்பு இந்த முகாம்களில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சறுக்கி விழுவதால் ஏற்படும் காயங்கள், சேற்றுப்புண் உள்ளிட்ட தோல் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவைக்கேற்ப டெட்டனஸ் ஊசிகளும் போடப்பட்டு வருகின்றன. 402 நடமாடும் மருத்துவ முகாம்கள் இயங்குகின்றன. 707 போலீரோ ஜீப்களில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், உதவியாளர்கள் என 4 ஆயிரம் பேர் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

இதுதவிர 2012–ல் முதல்–அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சித்த மருத்துவ நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது 1061 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் இன்று(நேற்று) முதல் 5 நாட்களுக்கு நோய் பரவாமல் இருக்க நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது.

பாதுகாப்பான குடிநீர் கேள்வி:–தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேறு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது?

பதில்:–உள்ளாட்சி அமைப்புகள், மெட்ரோ வாட்டர், குடிநீர் வாரியத்துடன் இணைந்து வெள்ளநீர் வடிந்த பகுதிகளில் கூடுதலாக குளோரின் மருந்து கலக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் டேங்கர் லாரி மூலம் கடைக்கோடி மக்கள் வரை வழங்க, குளோரின் அளவு பரிசோதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கழிவுநீர் வடிந்த பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தூவப்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியை தடுக்க கொசு மருந்து புகை அடிக்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

கேள்வி:–அரசு மருத்துவமனைகளில் மருந்துகளின் இருப்புகள் எவ்வாறு உள்ளது?

பதில்:–முதல்–அமைச்சரின் உத்தரவுப்படி அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான அளவு மருந்துகள் இருப்பில் உள்ளது. மருந்துகள், மாத்திரைகள், குளுக்கோஸ் மற்றும் பாம்புக்கடிக்கான மருந்துகள், ஊசிகள் தேவைக்கேற்ப வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

அவ்வப்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆய்வு கூட்டமும் நடந்து வருகிறது.