வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25,912 கோடி தேவை:உடனடியாக ரூ.2000 கோடி வழங்கவும் பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25,912 கோடி தேவை:உடனடியாக ரூ.2000 கோடி வழங்கவும் பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

புதன், டிசம்பர் 23,2015,

தமிழக  வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 25,912 கோடி தேவை என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு  மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில் உடனடியாக ரூ.2000 கோடி வழங்கக்கோரி அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள இரண்டாவது துணை அறிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடித விவரம்:
தமிழகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக சென்னை, அதைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும், கடலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டது.
பலத்த மழையால் பெருத்த சேதம்:
பெரும்பாலான இடங்களை வெள்ளம் சூழ்ந்ததோடு, லட்சக்கணக்கான வீடுகளும் நீரில் மூழ்கின. டிசம்பர் மாதத்தில் முதல் 5 நாள்களில் மட்டும் சென்னையில் 883 மில்லிமீட்டரும், காஞ்சிபுரத்தில் 1,254 மில்லிமீட்டரும், திருவள்ளூரில் 863 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. இதனால், சாலைகள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும், வீடுகள், உடைமைகளுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மத்தியக் குழுவினர் சென்ற பிறகுதான்…மூன்று கட்டங்களாக பெய்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக நிவாரணமாக ரூ.8,481 கோடி தேவை என தமிழக அரசு நவம்பர் 23-ஆம் தேதி கோரியது. தமிழகத்தில் மழையினால் பாதித்த பகுதிகளை மத்தியக் குழுவினரும் நவம்பர் 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை பார்வையிட்டனர். ஆனால், நான்காவது கட்டமாக பெய்த மிகப்பெரிய மழை மத்தியக் குழுவினர் வந்து சென்ற பிறகே பெய்தது.
மத்திய அரசு சார்பில் தமிழகத்துக்கு ரூ.940 கோடி நிதி நவம்பர் 23-ஆம் தேதி வழங்கப்பட்டது. ஆனால், இதில் ரூ.388 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதிக்கான மத்திய அரசின் பங்காகும். இது தமிழக அரசு ஏற்கெனவே மேற்கொண்ட பணிகளுக்காக வழங்கப்படும் நிதி. இப்போது கூடுதலாக வழங்கப்பட்ட நிதியல்ல.
அதோடு மீதமுள்ள ரூ.552 கோடியும் மத்திய கொள்கைக் குழு (“நீதி ஆயோக்’) மூலம் சிறப்புத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியாகும். இந்த நிதியும் குறிப்பிட்ட திட்டங்களுக்கானதே தவிர, தாற்காலிகமான மறுசீரமைப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்த முடியாது.
சென்னையில் வெள்ளச் சேதத்தை நீங்கள் (பிரதமர் மோடி) பார்வையிட வந்தபோது, மறுசீரமைப்புப் பணிகளுக்காக தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 ஆயிரம் கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினேன். நீங்களும் ரூ.1,000 கோடியை விடுவித்தீர்கள்.
வெள்ளச் சேத சீரமைப்புக்கு ரூ.25,912 கோடி தேவை: நான்காவது கட்டமாக டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட சேதத்தை தமிழக அரசு மதிப்பீடு செய்துள்ளது. அதன்படி, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு கூடுதலாக ரூ.17,431 கோடி தேவைப்படுகிறது. ஏற்கெனவே கோரியுள்ள ரூ.8,481 கோடியையும் சேர்த்தால், தமிழகத்தில் மழை, வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மொத்தம் ரூ.25,912 கோடி நிதி தேவைப்படுகிறது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சாலைகள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு உறுதியேற்றுள்ளது.
வட கிழக்குப் பருவமழையால் தமிழகத்தில் பயிர்களுக்கும், உடமைகளுக்கும், உயிர்களுக்கும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதை மறுசீரமைக்க மிகப்பெரிய நிதி தேவைப்படும்.
14-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையினால் மாநிலத்துக்கு ஏற்பட்ட இழப்புகளையும் சேர்த்து பார்க்கும்போது, மழை, வெள்ள நிவாரணத்துக்கு ஆகும் செலவை தமிழக அரசால் மட்டுமே சமாளிக்க முடியாது.
வெள்ள நிவாரணம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள 2 மனுக்களையும் விரைந்து பரிசீலித்து ரூ.25,912 கோடியை தமிழகத்துக்கு வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்களுக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்.
நிவாரணப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மேலும் ரூ.2 ஆயிரம் கோடியை விடுவிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கோரியிருந்தேன். இந்த நிதியை விரைந்து வழங்குமாறு நிதியமைச்சகத்துக்கு தாங்கள் (பிரதமர் மோடி) உத்தரவிட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா அதில் வலியுறுத்தியுள்ளார்.