வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மேலும் ரூ.2000 கோடி உடனடியாக வழங்க மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மேலும் ரூ.2000 கோடி உடனடியாக வழங்க மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

ஞாயிறு, டிசம்பர் 20,2015,

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மேலும் ரூ.2 ஆயிரம் கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று மத்திய நிதி, கம்பெனி விவகாரம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியிடம், முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுத்துறை வங்கிகளின் மாநில அளவிலான வங்கியாளர் குழு மூலம் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகம் வந்த மத்திய நிதி அமைச்சர்  அருண் ஜேட்லி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.

அந்த சந்திப்பின்போது வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தமிழகத்துக்கு மேலும் ரூ.2 ஆயிரம் கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று அருண் ஜேட்லியிடம், முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், “மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.

அப்போது, ஏற்கெனவே வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசுக்கு ரூ.1000 கோடி நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கியதற்காக பிரதமருக்கும், மத்திய நிதி அமைச்சருக்கும் முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்தார்.

தமிழக வெள்ள பாதிப்புகள் குறித்த துணை அறிக்கை தயாராகி வருவதாகவும் அதை விரைவில் தமிழக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்யும் எனக் குறிப்பிட்டார்.

இடைப்பட்ட காலத்தில், வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மேலும் ரூ.2 ஆயிரம் கோடியை உடனடியாக மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என முதல்வர் ஜேட்லியிடம் கோரிக்கை விடுத்தார்.

அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரங்களில் வசிக்கும் 50 ஆயிரம் குடும்பங்களை பாதுகாப்பான வசிப்பிடத்தில் குடியமர்த்துவதே அரசின் முதல் கடமை. முதற்கட்டமாக 25 ஆயிரம் வீடு தயாராக உள்ளது. 2 வாரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வீடு ஒதுக்குவதற்கான நடவடிக்கை தொடங்கும். ஒரு வருடத்திற்குள் 25 ஆயிரம் குடும்பங்கள் இந்த வீடுகளில் குடியமர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், 50 ஆயிரம் வீடுகளை கட்டும் திட்டத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடியை மத்திய அரசு விரைவில் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜேட்லியிடம் வலியுறுத்தினார்.

மேலும், வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டுவர மத்திய அரசின் உதவியை தமிழக அரசு எதிர்பார்த்து உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா மத்திய நிதி அமைச்சர் ஜேட்லியிடம் தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.