வெள்ள நிவாரணப் பணியாக இதுவரை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா விளக்கம்

வெள்ள நிவாரணப் பணியாக இதுவரை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா விளக்கம்

செவ்வாய், டிசம்பர் 08,2015,

வெள்ள நிவாரணப் பணியாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பெய்த கனமழையின் காரணமாக அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களான கடலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்த, அமைச்சர்கள், மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் கொண்ட குழுக்களை அனுப்பி வைத்தேன்.

இதுவன்றி சென்னை மாநகரில், ஒவ்வொரு மண்டலத்திற்கும், ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி வீதம், 15 மண்டலங்களிலும் உயர் அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையருடன் இணைந்து மேற்கொண்டனர்.

முப்படை உதவி

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெருமழை பொழிந்ததன் காரணமாக வெள்ளத்தில் சிக்கும் மக்களை மீட்பதற்குத் தேவையான ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப்படை, தேசியப் பேரிடர் மீட்பு குழு, கடலோரக் காவல் படை ஆகியவற்றின் உதவி உரிய நேரத்தில் கோரி பெறப்பட்டது. 1,200 ராணுவ வீரர்கள், 600 கப்பற்படை மற்றும் விமானப்படை வீரர்கள், 1,920 தேசிய பேரிடர் பாதுகாப்புப் படையினர், 30 ஆயிரம் காவல் துறையினர், 1,400 தீயணைப்பு மற்றும் மீட்புத் பணிகள் துறையினர், 45 ஆயிரம் இதரத்துறையினர் என மொத்தம் 80,120 பேர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மழை வெள்ளம் சூழ்ந்ததால் பாதிப்புக்கு உள்ளான 13,80,461 மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு 5,554 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவ்வாறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுவன்றி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 72,64,353 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாடப்புத்தகங்கள்

மழை வெள்ளத்தால் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை இழந்த பள்ளி மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் ஒரு ஜோடி சீருடை வழங்க நான் ஆணையிட்டிருந்தேன். இதனடிப்படையில் இதுவரை 37,707 பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களும், 26,865 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களும், 9,306 மாணவர்களுக்கு பள்ளிச்சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், மழை வெள்ளத்தால் குடும்ப அட்டைகளை இழந்த மக்களுக்கு, நகல் குடும்ப அட்டைகள் வழங்கவும் என்னால் ஆணையிடப்பட்டு, நகல் குடும்ப அட்டைகள் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன. நிவாரண முகாம்களில் தங்கியுள்ள நபர்களுக்கு பால் மற்றும் பால் பவுடர் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 453 டன் பால் பவுடர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 130 டன், திருவள்ளூர் மாவட்டத்தில் 112 டன், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 108.5 டன், கடலூர் மாவட்டத்தில் 102.5 டன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

பண்ணை பசுமை கடை

இதுவன்றி, என்னுடைய ஆணையின் பேரில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு பாய் மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டுள்ளன. வெளிச்சந்தையில் காய்கறிகளின் விலை அதிகமாகியுள்ளதால், உடனடியாக பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மூலமாக குறைந்த விலையில் காய்கறிகளை பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும் என்று நான் ஆணை பிறப்பித்ததன் அடிப்படையில், தற்போது சென்னை மாநகரத்தில் 90 பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகளில் குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் 13 நகரும் அங்காடிகள் மூலமாக விற்பனை நடைபெற்று வருகிறது.

சென்னையில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்களுள், 85 சதவீதம் நிலையங்கள் போதிய அளவு இருப்புடன் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு எரிவாயு எவ்வித தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மகளிர் சுகாதாரம் பேணும் வகையில் ‘சேனிட்டரி நேப்கின்கள்’ வழங்க வேண்டும் நான் உத்தரவிட்டதன் பேரில், தற்போது நிவாரண முகாம்களில் ‘சேனிட்டரி நேப்கின்கள்’ வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு ‘டையாபரும்’ எனது ஆணையின் பேரில் வழங்கப்பட்டு வருகிறது.

95 சதவீத மின் வினியோகம்

மின் வினியோகத்தைப் பொறுத்தமட்டில், சென்னையில் 95 சதவீத இடங்களில் மின்வினியோகம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளநீர் சூழ்ந்துள்ள ஒரு சில இடங்களில் மட்டும், இன்னமும் மின் வினியோகம் சீர் செய்யப்படவில்லை. வெள்ளநீர் வடிந்த பின்னர் இந்த இடங்களில் மின் வினியோகம் சீர் செய்யப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது