வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ 25,912 கோடி தேவை மத்திய குழுவிடம் ஜெயலலிதா வலியுறுத்தல்

வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ 25,912 கோடி தேவை மத்திய குழுவிடம் ஜெயலலிதா வலியுறுத்தல்

புதன், ஜனவரி 06,2016,

வரலாறு காணாத கனமழை காரணமாக, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை மதிப்பிடுவதற்காக, முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியபடி, தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று சந்தித்தனர். பெருமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி அளிப்பதை தமிழக அரசு முழுவீச்சில் தொடங்கியுள்ளது என்பதை கருத்தில் கொண்டு, மத்திய குழு தனது பரிந்துரைகளை விரைவில் அளித்து, மத்திய அரசு தேவையான நிதி உதவியை உடனடியாக அளிக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் கடந்த மாதம் 3-ம் தேதி தமிழகத்தில் வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட வந்தபோது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை விவரித்து, வெள்ள பாதிப்பு குறித்த கூடுதல் அறிக்கை ஒன்றினை அனுப்பி வைப்பதாக தெரிவித்ததுடன், வெள்ள நிவாரண மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யுமாறும் கோரினார்.

பிரதமர் உடனடியாக ஆயிரம் கோடி ரூபாயை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி, பிரதமருக்கு தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினை தெரிவித்து கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்தார். இக்கடிதத்துடன், டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பட்டியலிட்ட அறிக்கை ஒன்றினை அனுப்பிவைத்தார். வெள்ள நிவாரண மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக மொத்தம் 25 ஆயிரத்து 912 கோடியே 45 லட்சம் ரூபாய் விடுவிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கடிதம் மற்றும் வெள்ள பாதிப்பு அறிக்கைகளை பெற்ற மத்திய அரசு, உள்துறை இணைச் செயலர் திரு. T.V.S.N. பிரசாத் தலைமையில் 8 உறுப்பினர்கள் கொண்ட மத்திய குழுவினை வெள்ள சேதங்களை மதிப்பிடுவதற்காக அனுப்பி வைத்துள்ளது. இந்தக் குழுவில் மத்திய வேளாண்மைத் துறை கூடுதல் ஆணையர் திரு.ஓய்.ஆர். மீனா, மத்திய குடிநீர் துறை முதுநிலை ஆலோசகர் திரு.ஜி.ஆர். ஜார்கர், மத்திய சுகாதாரத் துறை முதுநிலை மண்டல இயக்குநர் டாக்டர் ஆர். ரோஷினி, மத்திய எரிசக்தித் துறை உதவி இயக்குநர் திரு. சுமித் கோயல், மத்திய ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் திரு. B.C. பெஹரா, மத்திய நீர்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளர் திரு.என்.எம். கிருஷ்ணன்உன்னி, மத்திய சாலை போக்குவரத்துத் துறை மண்டல இயக்குநர் திரு.டி.எஸ். அரவிந்த் ஆகியோர் உறுப்பினர்கள் ஆவர். இக்குழுவானது இன்றும், நாளையும் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை மதிப்பிடும் பணியில் ஈடுபடும்.

திரு. டி.வி.எஸ்.என் பிரசாத் தலைமையிலான மத்திய குழுவினர், முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். அப்பொழுது முதலமைச்சர் ஜெயலலிதா, பெருமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி அளிப்பதை தமிழக அரசு முழுவீச்சில் தொடங்கியுள்ளது என்பதை கருத்தில் கொண்டு மத்திய குழு தனது பரிந்துரைகளை விரைவில் அளித்து மத்திய அரசு தேவையான நிதி உதவியை உடனடியாக அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதற்காக தெரிவித்தார்.

மத்திய உள்துறை இணைச் செயலாளர் திரு.T.V.S.N. பிரசாத், தமிழக அரசு உடனடியாக மேற்கொண்ட வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து பாராட்டு தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு ஓ. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு நத்தம் ஆர். விசுவநாதன், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் திரு ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு எடப்பாடி கே. பழனிசாமி, உயர் கல்வித் துறை அமைச்சர் திரு பி. பழனியப்பன், வருவாய்த் துறை அமைச்சர் திரு.ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் திரு.கே. சண்முகம்வருவாய் நிர்வாக ஆணையர் திரு. அதுல்ய மிஸ்ரா, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் திரு. என் எஸ் பழனியப்பன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் திரு. ராஜீவ் ரஞ்சன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் திரு. க. பணீந்திர ரெட்டி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறை மற்றும் வேளாண்மைத் துறை செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், வருவாய்த் துறைச் செயலாளர் திரு.ஆர். வெங்கடேசன், சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.விக்ரம் கபூர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.