வெள்ள நிவாரண நிதி விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் பேசிய ஜாவடேகருக்கு மக்களவையில் அதிமுக அவைத்தலைவர் கண்டனம்

வெள்ள நிவாரண நிதி விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் பேசிய  ஜாவடேகருக்கு மக்களவையில் அதிமுக அவைத்தலைவர் கண்டனம்

புதன், மார்ச் 16,2016,

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜவடேகர் சமீபத்தில் கூறிய கருத்திற்கு மக்களவையில் அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் கலந்து கொண்ட அதிமுக அவைத்தலைவர் டாக்டர்.பி.வேணுகோபால் கண்டனம் தெரிவித்தார்.

இது குறித்து மக்களவையில் வேணுகோபால் பேசியதாவது: தமிழகத்தில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பொதுமக்களுக்கு பெருத்த நஷ்டமும், எதிர்பாராத பாதிப்புகளும் ஏற்பட்டன. இதை சமாளிக்கும் வகையில் தமிழக முதல் அமைச்சர் மத்திய அரசிடம் குறைந்தது ரூபாய் 25,000 கோடி அளிக்க வேண்டும் என கோரியிருந்தார். ஆனால்,த்திய அரசு வெறும் 2,150 கோடி அளிப்பதாக அறிவித்திருந்தது. இதன் இரண்டாவது தவணை தொகை நிவாரணப் பணிகளை தாமதமாக மத்தியக் குழு பார்வையிட்ட பின் அளிக்கப்பட்டிருந்தது. பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசிடம் இருந்து நிவாரணத் தொகைக்காக இன்னும் நாங்கள் காத்திருக்கிறோம்.

இத்துடன், பட்ட காயங்களை அவமானப்படுத்தும் வகையில் பொறுப்பில்லாமல் மத்திய இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் போல் சிலர் கூறிய கருத்துக்களின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் இருக்கிறோம். இவற்றில் எந்த வகையிலும் நேரிடையாக சம்மந்தப்பட்டாத மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் இணை அமைச்சர், தமிழக அரசின் நிவாரணப் பணிகள் மீது பொருத்தம் இல்லாத கருத்துக்களை கூறி இருந்தார். வெள்ளநிவாரணத்தில் தமிழக அரசு செய்த நிவாரணப் பணிகளின் நிதி அனைத்தும் மத்திய அரசால் அளிக்கப்பட்டதாகவும் பெருமைப்பட்டுக் கொண்டார்.

அதில், கடினமான நிதிபற்றாக்குறை சூழலில் தமிழக அரசு பொதுமக்களின் நிவாரணப் பணிகளில் தீவிரமான ஈடுபட்டு பணியாற்றியது அவரது பார்வையில் படவில்லை. எங்களுடைய எதிர்பார்ப்பை பல்வேறு மாநில அரசுகள் மற்றும் தனிப்பட்டவர்கள் நிறைவேற்றினார்களே தவிர மத்திய அரசு செய்யவில்லை.

இந்த நிவாரணப்பணிகளுக்கு வழங்க மத்திய அரசிற்கு எங்கிருந்து நிதி கிடைக்கிறது? இந்த அனைத்து தொகையும் நாட்டின் பல்வெறு மாநிலங்களில் வாழும் பொதுமக்களிடம் இருந்து தான் கிடைக்கிறது. இந்த சூழலில் ஜாவ்டேகர் கூறிய கருத்து மிகவும் அதிகமானது ஆகும். தமிழக அரசிற்கு உதவிக்கரம் நீட்டுவதில் விடுத்து இதுபோன்ற கருத்துக்களை கூறுவதில் மத்திய அமைச்சர்கள் அவசரம் காட்டக் கூடாது. இவர் போன்ற பொறுப்பில்லாத அமைச்சர்கள் நல்ல கலாச்சாரம் மற்றும் அரசியல் பக்குவம் கொண்ட மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடுவிடம் கற்றுக் கொள்ள வேண்டும். இவர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை நகரவாசிகளுக்கு கடந்த டிசம்பரில் உதவிக்கரம் நீட்டியிருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.