வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளில் புதிதாக புகை மருந்து அடிக்கும் எந்திரங்கள்:முதலமைச்சர் உத்தரவின்பேரில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை

செவ்வாய், டிசம்பர் 22,2015,
அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களிலும், வெள்ள நிவாரணப் பணிகள் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக, இம்மாவட்டங்களில் தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை மூலம் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் முதலமைச்சர் உத்தரவின்பேரில் கொசு மற்றும் ஈக்களை அழிக்கும் பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு, தொற்றுநோய் பரவாமல் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. நன்னீரில் பரவும் கொசுக்களால் ஏற்படும் டெங்கு போன்ற காய்ச்சல், சிக்குன் குனியா போன்ற தொற்று நோய்களைத் தடுக்க, புகை மருந்து அடிக்கும் மேலும் 5 பெரிய இயந்திரங்களும், கையில் எடுத்துச் செல்லும் 25 சிறிய புகை அடிப்பான்களும் புதிதாக வாங்கப்பட்டு, நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள குழுவினரிடம் வழங்கப்பட்டது.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர். ஜெ ராதாகிருஷ்ணன், பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை இயக்குநர் டாக்டர். குழந்தைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையின் கூட்ட அரங்கில், காய்ச்சல் மற்றும் நோய்த்தடுப்பு குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். தொற்றுநோய் வராமல் தொடர்ந்து தடுத்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அப்போது அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.