வெள்ள பாதிப்பு குறித்து தவறான தகவல்களை வெளியிட்ட வழக்குகளில் நேரில் ஆஜராகும்படி விஜயகாந்த், மு.க.ஸ்டாலின், அன்புமணிக்கு சம்மன் : சென்னை செசன்சு கோர்ட்டு உத்தரவு

வெள்ள பாதிப்பு குறித்து தவறான தகவல்களை வெளியிட்ட வழக்குகளில் நேரில் ஆஜராகும்படி விஜயகாந்த், மு.க.ஸ்டாலின், அன்புமணிக்கு சம்மன் : சென்னை செசன்சு கோர்ட்டு உத்தரவு

சனி, பெப்ரவரி 27,2016,

முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் தொடர்ந்த அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராகும்படி விஜயகாந்த், மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு சென்னை செசன்சு கோர்ட்டு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.  சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், முதல்வர் ஜெயலலிதா சார்பில் விஜயகாந்த் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பிப்ரவரி 3-ம் தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியுள்ளார். இது தமிழக அரசு மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. எனவே, விஜயகாந்த் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.  இந்த மனுவை நீதிபதி ராஜமாணிக்கம் நேற்று விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘வழக்கு ஆவணங்களின் நகல்களை பெறுவதற்காக விஜயகாந்த் வருகிற ஏப்ரல் 24-ம் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று கூறி சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவதூறு வழக்குகளை தனித்தனியாக கடந்த 18-ந் தேதி தாக்கல் செய்திருந்தார்.  மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட இந்த வழக்கில், கடந்த 3-ம் தேதி சென்னையில் நடந்த நமக்கு நாமே நிகழ்ச்சியில், சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது குறித்து ஸ்டாலின் அவதூறாக பேசியுள்ளார். இது பத்திரிகைகளில் செய்தியாக வெளியாகியுள்ளன. எனவே, மு.க.ஸ்டாலின் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று அமைச்சர் அதில் கூறியிருந்தார்.

அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கில், ‘பிப்ரவரி 4-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. எனவே, அன்புமணி ராமதாஸ் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று அமைச்சர் அதில் கூறியிருந்தார்.  இந்த 2 வழக்குகளையும் விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், அவதூறு வழக்குகளின் ஆவணங்களின் நகல்களை பெறுவதற்காக மு.க.ஸ்டாலின் வருகிற ஏப்ரல் 18-ந் தேதியும், அன்புமணி ராமதாஸ் வருகிற ஏப்ரல் 21-ந் தேதியும் நேரில் ஆஜராகவேண்டும் என்று அவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

அதேபோல, முரசொலி பத்திரிகையின் மீதும் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், முரசொலி பத்திரிகையில் கடந்த 4-ம் தேதி வெள்ளம் குறித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், மழை வெள்ளம் குறித்து அவதூறான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், ‘முரசொலி பத்திரிகை ஆசிரியர் முரசொலி செல்வம் வருகிற ஏப்ரல் 12-ம் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.