ஸ்குவாஷ்’ வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

ஸ்குவாஷ்’ வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

ஜூலை ,12 ,2017 ,புதன்கிழமை, 

சென்னை : முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று  ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை விளையாட்டு அலுவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை வழங்கினார்.

அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்குதல், திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உயரிய பயிற்சி அளித்தல், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையங்கள் அமைத்தல், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவித் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், 2014-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டி மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய நாட்டின் சார்பில் பங்கேற்று தங்கப் பதக்கங்களை வென்றதோடு, பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய ஸ்குவாஷ் விளையாட்டு போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று, தற்போது இந்தியாவின் முதல்நிலை விளையாட்டு வீராங்கனையாகத் திகழும் ஜோஷ்னா சின்னப்பாவின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், அவரது திறனை சிறப்பாக பயன்படுத்தும் வகையிலும், அவர் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நேரில் வந்து கோரிக்கை அளித்ததன் பேரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை விளையாட்டு அலுவலர் பதவிக்கு நேரடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வின்போது, பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் விக்ரம் கபூர், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எம். சாய்குமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.