ஸ்ரீரங்கத்தில் காய்கறி, உணவு கழிவுகளை பயன்படுத்தி, மின்சாரம் தயாரிக்கும் புதிய திட்டம் :முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நன்றி

ஸ்ரீரங்கத்தில் காய்கறி, உணவு கழிவுகளை பயன்படுத்தி, மின்சாரம் தயாரிக்கும் புதிய திட்டம் :முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நன்றி

செவ்வாய், பெப்ரவரி 02,2016

திருச்சி ஸ்ரீரங்கத்தில் காய்கறி மற்றும் உணவு கழிவுகளை பயன்படுத்தி, மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, ஸ்ரீரங்கம் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாநகராட்சியில் சேகரிக்கப்படும் 5 டன் காய்கனி மற்றும் உணவுக் கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிப்பதற்காக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் உயிரி எரிவாயு கூடம் அமைக்கும் திட்டத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்து, இதற்காக 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். இதன்படி, ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் உயிரி எரிவாயு கூடம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து, கடந்த 29-ம் தேதி முதலமைச்சரால் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்படும் காய்கறி, கனிகள் மற்றும் உணவுக் கழிவுகள் இங்கு கொண்டுவரப்பட்டு கூழாக்கப்பட்ட பின்னர், உயிரி எரிவாயுவாக மாற்றப்படுகிறது. அதன்மூலம் 40 கிலோ வாட் மின்சாரம் பெறப்படுகிறது. இதனை பயன்படுத்தி ஸ்ரீரங்கம் நகர புதை வடிகால் கழிவு நீரேற்று நிலைய மின்மோட்டார், குடிநீர் விநியோக மோட்டார், பொதுக் கழிப்பிட மின்மோட்டார் மற்றும் 106 தெரு விளக்குகள் ஆகியவற்றுக்கு இந்த மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. மின்உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகளை அரசு தலைமைக் கொறடா திரு. ஆர். மனோகரன், மாநகராட்சி அதிகாரிகளுடன் இன்று நேரில் பார்வையிட்டார். இத்திட்டத்தை செயல்படுத்திக் கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, ஸ்ரீரங்கம் மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.