அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் பறிமுதல் ; அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் பறிமுதல் ; அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
ஞாயிறு, அக்டோபர் 30,2016,
சென்னையில் தீபாவளியை முன்னிட்டு சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில், விதிமுறைகளுக்கு புறம்பாக அதிகக் கட்டணம் வசூலித்த 15 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆம்னி பேருந்துகளில் உரிய கட்டணம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சருக்கு பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, மாவட்டந்தோறும் அரசு போக்குவரத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நீலகிரி மாவட்டம், உதகையில், வெளியூர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ராமநாதபுரத்தில் ஆம்னி பேருந்துகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். ஆம்னி பேருந்துகளில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்ட முதலமைச்சருக்கு பயணிகள் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

நாகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டு ஆம்னி பேருந்துகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோவையில் 11 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுஆம்னி பேருந்துகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் கடந்த இரு நாட்களாக ஆம்னி பேருந்துகளில் நடத்தப்பட்ட சோதனையில், அதிக கட்டணம் வசூலித்த 15 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விதிகளுக்கு புறம்பாக இயங்கிய 750 பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.