அதிமுகவின் ஆட்சியை கவிழ்ப்பேதே திமுகவின் ஒரே குறிக்கோள் : பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றாச்சாட்டு

அதிமுகவின் ஆட்சியை கவிழ்ப்பேதே திமுகவின் ஒரே குறிக்கோள் : பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றாச்சாட்டு

வியாழக்கிழமை, பிப்ரவரி 23, 2017,

சென்னை : ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பதே திமுகவின் குறிக்கோள் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்தத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் நேற்று  பேட்டி அளித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- சட்டப் பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் இரண்டு பிரச்னைகளை வைத்தனர். ஒன்று பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மற்றொன்று பேரவையை ஒத்திவைத்து ஒரு வாரம் கழித்து நடத்த வேண்டும் என்பதாகும்.
ரகசிய வாக்கெடுப்பு தவிர்க்கப்பட்டதற்கு நியாயங்கள் பல இருந்தாலும் ரகசிய வாக்கெடுப்பு என்பது சட்டத்துக்கு விரோதமாகும். ஒவ்வொரு மானியக் கோரிக்கையின் போதும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் அது தோற்றுப் போகும் பட்சத்தில் அரசை எப்படி நடத்த முடியும்?
ரகசிய வாக்கெடுப்பு என்பதே சட்டத்துக்கு எதிரானது. காரணம், இந்தியாவில் கட்சித் தாவல் தடை சட்டம் நடைமுறையில் உள்ளது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தும் போது அவர்கள் மாற்றி வாக்களித்தால் அதனை எப்படிக் கண்டுபிடிப்பது? சட்டத்தில் இடம் இல்லாதபோது திமுகவின் கோரிக்கையை பேரவைத் தலைவர் நிராகரிக்கிறார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற 15 நாள்கள் ஆளுநர் அவகாசம் அளித்தார். இதைத் தொடர்ந்து, இரண்டு நாள்களில் பேரவையில் நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதற்கு மேல் அவகாசம் கொடுத்தால் வேறு பல பிரச்னைகள் உருவாகும்.
பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் தங்களது தொகுதிகளுக்கு அனுப்பி அதன் பிறகு வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். அவர்களை தொகுதியில் இருந்து வாக்களிக்க வரவிடாமல் தடுத்து விட்டால் என்ன செய்வது? அவர்கள் வருவார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? இதனால், ஜனநாயகம் என்னவாகும்?
வெளிநடப்பு செய்யலாமே? ரகசிய வாக்கெடுப்பு நடத்த சட்டத்தில் இடமில்லை என்று பேரவைத் தலைவர் தீர்ப்பு கொடுத்தால் எதிர்க்கட்சியைச் சேர்ந்த திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்ய வேண்டியது தானே. வெளிநடப்பு என்பது அவர்களுக்கு கைவந்த கலைதானே.
அவர்கள் சொல்வது போன்று, எதிர்க்கட்சிகள் அனைத்தையும் வெளியேற்றவில்லை. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அவை நடவடிக்கைகளை மேற்கொள்ள விடாமல் தடுத்த காரணத்தாலேயே திமுகவினரை வெளியேற்ற பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். சட்டப் பேரவையை நடத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அவருக்கு உள்ளது.
நோய் வந்தால் அதனை மருந்தாலோ அல்லது அறுவைச் சிகிச்சை முறையாலோ மருத்துவர் குணப்படுத்துவார். அதனைத் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு மருத்துவரைச் சார்ந்தது. அந்த வகையில் கடந்த 18-ஆம் தேதியன்று ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக பேரவைத் தலைவர் அறுவை சிகிச்சையை கையில் எடுத்தார்.
ஆட்சிக் கவிழ்ப்பே குறிக்கோள்: நம்பிக்கை தீர்மானத்தின் போது திமுக தொடர்ந்து தனது நிலைப்பாடுகளை மாற்றியது. முதலில் தீர்மானத்தின் மீது நடுநிலை வகிப்போம் என்றார்கள். கடந்த 17-ஆம் தேதியன்று தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்றனர்.
எதிர்பார்த்த அளவுக்கு ஆளும்கட்சியில் இருந்து சட்டப் பேரவை உறுப்பினர்கள் அணி மாறவில்லை. இதனால், ஆட்சிக் கவிழ்ப்பு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.
இப்போதும் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆளுநரிடம் மனு கொடுக்கிறார்கள். குடியரசுத் தலைவரை பார்க்கப் போகிறோம் என்கிறார்கள். உயர்நீதிமன்றம் ஏதாவது சொல்லாதா என்று பார்க்கிறார்கள்.
இளைஞர்கள், மாணவர்களை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் கிளர்ந்து எழுந்ததைப் போன்று எழச் சொல்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது, ஆரோக்கியமாக செயல்பட வேண்டிய எதிர்க்கட்சி, ஆட்சி கவிழ்ந்து விடாதா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இதுபோன்ற செயல்கள் மூலம், அழிவை நோக்கிச் செல்லும் கட்சியாக எதிர்க்கட்சி (திமுக) இருக்கிறது.
அழிவை நோக்கிச் செல்கிறது: பேரவைத் தலைவரை எதிர்ப்பது சரி. ஆனால், அவரை பிடித்துத் தள்ளுகிறார்கள் என்றால் என்ன பொருள். இதனால் பாதிக்கப்பட்ட பேரவைத் தலைவர் வேதனையில் சொல்கிறார். அதில் என்ன தவறு? அவர் ஜனநாயகத்தை காப்பாற்றி இருக்கிறார்.இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.