அதிமுக ஆட்சிக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திமுக சதித் திட்டம் ; வைகோ குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சிக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க  திமுக சதித் திட்டம் ; வைகோ குற்றச்சாட்டு

புதன்கிழமை, பிப்ரவரி 22, 2017,

கலவரத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதன் மூலம், தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டுவர திமுக திட்டமிட்டுள்ளதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து வைகோ கூறுகையில்,தமிழகத்தில் நிலவிய அரசியல் பரபரப்பு சம்பவங்கள் குறித்து மக்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டியது அவசியமானது. முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் விலகலுக்குப் பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமியை அழைக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வதாக முதலில் குற்றம்சுமத்தியவர் மு.க.ஸ்டாலின். பின்னர், 15 நாள் அவகாசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அழைத்தபோது, அது குதிரைபேரத்துக்கு வழிவகுக்கும் என்றார். 2 நாளுக்கு பிறகு பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முயன்றபோது, இவ்வளவு அவசரமாக வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றார். தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகவே பேசி வருகிறார் மு.க.ஸ்டாலின்.

குதிரைபேரம் என்பது பெரும்பான்மை உள்ளவர்களிடம் இருந்து சில உறுப்பினர்களை இழுத்து வருவதற்காகத்தான் அமையும். இப்போது, தோல்வியைத் தழுவியவர்கள்தான் குதிரைபேரத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதிமுகவில் எந்த அணிக்கு ஆதரவாகவும் நான் இல்லை. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைக்க முயல்வதோ, அரசியல் சட்டத்தின் 356ஆவது பிரிவை பயன்படுத்துவதையோ ஒருநாளும் அனுமதிக்க முடியாது. ஆனால், திமுக அத்தகைய எண்ணத்துடன் முழு அளவில் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

பேரவையில் திமுகவினர் கலவரத்தை ஏற்படுத்தி அதன்மூலம் ஆதாயம் தேட முயன்றனர். ஆனால், அதிமுகவினர் அமைதி காத்ததால் முடியவில்லை. பின்னர், சபை காவலர்களால் தாக்கப்பட்டதாகக் கூறி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.இவ்வாறு வைகோ கூறினார்.