அதிமுக சார்பில் ஐந்தாவது நாளாக நடைபெற்ற வேட்பாளர் நேர்காணல் : 8 மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு

அதிமுக சார்பில் ஐந்தாவது நாளாக நடைபெற்ற வேட்பாளர் நேர்காணல் : 8 மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு

சனி, மார்ச் 26,2016,

அ.தி.மு.க.வில் 5-வது நாளாக முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று வேட்பாளர் நேர்காணல் நடந்தது. இதற்காக 8 மாவட்ட நிர்வாகிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேற்று 5-வது நாளாக வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட்டது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த வேட்பாளர் நேர்காணலை நடத்தினார். அவருடன், அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களும் இருந்தனர்.
காலை 11.30 மணிக்கு தொடங்கிய நேர்காணலில், நேற்று முன்தினம் விடுபட்ட வேலூர், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு விருப்ப மனு செய்திருந்தவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து, மதியம் 1.30 மணிக்கு கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் வேட்பாளர் தேர்வு நடந்தது. இதற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் நேற்று போயஸ் கார்டன் வந்திருந்தனர். அனைவரும் கட்சி கொடி கட்டிய காரில், தங்களது ஆதரவாளர்களுடன் பங்கேற்றனர்.கார்கள் அணிவகுத்து வந்ததால், போயஸ் கார்டன் பகுதியே 5-வது நாளாக நேற்று பரபரப்பாக இருந்தது.
வேட்பாளர் நேர்காணலுக்கு வந்த பெண்களின் பெரும்பாலானோர் பச்சை நிற சேலை அணிந்து வந்திருந்தனர். நேற்று விடுபட்ட மாவட்டங்களுக்கு இன்று (சனிக்கிழமை) வேட்பாளர் நேர்காணல் நடைபெறும்.