அதிமுக நிர்வாகி மனைவிக்கு கொலை மிரட்டல்: பாமக பிரமுகர் கைது

அதிமுக நிர்வாகி மனைவிக்கு கொலை மிரட்டல்: பாமக பிரமுகர் கைது

புதன், மே 04,2016,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே அதிமுக ஒன்றியச் செயலர் மனைவியிடம் வாக்கு கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பாமகவினர் 50 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
 செந்துறை அருகேயுள்ள முள்ளுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், செந்துறை ஒன்றிய அதிமுக செயலாளராக உள்ளார். இவரது மனைவி சுதா. கடந்த சில நாள்களுக்கு முன்பு கட்சி பணிக்காக சுரேஷ் வெளியூர் சென்றுவிட்டார்.
 இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சி துணைத் தலைவர் குபேர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பாமகவினர் வீடு வீடாக சென்று குன்னம் தொகுதி பாமக வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
 அப்போது, அதிமுக ஒன்றியச் செயலர் சுரேஷ் மனைவி சுதாவிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி, அவரிடம் வாக்கு கேட்டு சிலர் செல்லிடப்பேசியில் அவரை படம் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
 இதுகுறித்து சுதா தளவாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனது கணவர் இல்லாத நேரத்தில், குபேர் தலைமையில் பாமகவினர் தனது வீட்டுக்கு வந்து துண்டுப் பிரசுரம் வழங்கி இந்த தேர்தலில் மாம்பழம் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியதோடு, வாக்களிக்கவில்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
 இதையடுத்து பாமகவினர் 50 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 மேலும் இதுதொடர்பாக இரும்பிலாக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராவணன் என்பவரை போலீஸார்  கைது செய்தனர்.