அத்திக்கடவு – அவிநாசி திட்டம் 30 மாதத்தில் நிறைவேற்றப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் 30 மாதத்தில் நிறைவேற்றப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூலை ,22 ,2017 ,சனிக்கிழமை,

திருப்பூர் : திருப்பூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கிவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அத்திக்கடவு – அவிநாசி திட்டம் 30 மாதத்தில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். மேலும், அவர் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

திருப்பூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், அமைச்சர் பெருமக்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்வருக்கு திருப்பூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்புக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விழா நடக்கும் இடத்திற்கு சென்றார். பிறகு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முறைப்படி துவங்கியது. இந்த விழாவில் எம்.ஜி.ஆர். படத்தை திறந்து வைத்து முதல்வர் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

பின்னர் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி பேசியதாவது:-

மறைந்த முதல்வர் அம்மா (ஜெயலலிதா) இருக்கின்ற போது இந்த திருப்பூர் மாவட்ட மக்கள் பயன்பெற வேண்டி, விவசாய பெருங்குடி மக்கள் வாழ்வில் வளம்பெற வேண்டும் என்பதற்காக அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை முதல்வராக இருந்த காலத்திலேயே ஆரம்பித்தார்கள்.   

ஆகவே, அம்மா வழியில் வந்த அம்மா அரசு, இதற்காக இந்த ஆண்டு 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கின்றது.  இந்த அத்திக்கடவு – அவிநாசி திட்டம் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் உள்ளடங்கிய விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறுகின்ற ஒரு அற்புதமான திட்டம்.  இந்தத் திட்டத்திற்கு கிட்டத்தட்ட 1.50 டி.எம்.சி தண்ணீர் தேவை.  இந்த திட்டத்திற்காக 70 நாட்கள், 250 கிணறுகளில் தண்ணீர் எடுக்கப்பட்டு, கிட்டத்தட்ட 9 வட்டங்களில் உள்ள பொதுப்பணித் துறை ஏரிகள் , 41 ஏரிகள், 630 குளம் குட்டைகள், இதனால் நீர் நிரப்பப்பட்டு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும் என்பதை மகிழ்ச்சியோடு இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.  கிட்டத்தட்ட இந்த திட்டம், 2 திட்டங்களாக வகுக்கப்பட்டன.

ஆகவே இந்த திட்டங்களிலே மிக முக்கியமானவைகளை கவனித்து, எந்தத் திட்டம் எளிது என்றும், எந்தத் திட்டம் வேகமாக விரைவாக நடைபெறும் என்றும், இந்த திட்டத்தை ஆய்வு செய்த போது, இதிலே நமக்குக் கிடைத்தது, பவானி அருகில் உள்ள காளிங்கராயன் பகுதியிலிருந்து தண்ணீர், பம்ப் செய்யப்பட்டு இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டத்திற்காக 1516 கோடி ரூபாய் அரசு ஒதுக்கி இருக்கிறது. இதை மாநில அரசாங்கமே முழுமையாக செயல்படுத்தலாம். இதற்கு முன்பு இருந்த திட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி பெறவேண்டும். 

இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானால் சுமார் 7 அல்லது 8 ஆண்டு காலம் பிடிக்கும்.  ஆனால், 30 மாதத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.  வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் இந்த பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, இந்தப் பணிகள் தொடங்குகின்ற நற்செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்து, அம்மாவினுடைய அரசு ஆட்சியில் இருக்கின்ற போதே, ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற போதே அடிக்கல் நாட்டப்பட்டு அம்மாவுடைய ஆட்சியிலே திறப்பு விழா செய்யப்பட்டு 3 மாவட்ட விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறுவார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

அதேபோல, கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருமை சகோதரர் வேலுமணி அவர்களும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருமை நண்பர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அவர்களும், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் அவர்களும், இந்த திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழக முன்னோடி பொறுப்பாளர்களும், விவசாய பெருங்குடி மக்களும் அத்தனைபேரும் கோரிக்கை வைத்தார்கள். எங்கள் பகுதியில் தென்னையை நாங்கள் அதிகமாக பயிரிட்டிருக்கின்றோம். இந்தத் தென்னை மரத்திலிருந்து நீரா என்கிற பானத்தை இறக்குகின்ற ஒரு சூழ்நிலையை எங்களுக்கு உருவாக்கித் தாருங்கள்.  தென்னைக்கு என்று தனியாக அறிவியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆகவே, இந்த நீரா பானம் மூலமாக அருமையான திட்டத்தை அரசு அறிவித்திருக்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியினை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, இந்த நீரா பானத்தினை எடுப்பதன்மூலம் விவசாய பெருங்குடி மக்கள் பலமடங்கு வருவாய் பெறுவார்கள்.  இன்றைக்கு ஒரு தென்னை மரம் மூலம் ஆண்டுக்கு 1000 ரூபாய் வருமானம் என்று எடுத்துக் கொண்டால், இந்த நீரா பானம் வருகின்ற போது, அதை நடைமுறைப்படுத்துகின்ற போது  ஒரு தென்னை மரத்திற்கு குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5000 ரூபாய் வருமானம் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, அம்மா அவர்களுடைய அரசு விவசாயிகளுடைய அரசு, விவசாயிகளின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற ஒரே அரசு அம்மாவினுடைய அரசு என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, அதேபோல விவசாயிகள் உரமிட்டுத்தான் விவசாயம் செய்ய வேண்டிய சூழ்நிலை,  அப்படி உரமிட்டு விவசாயம் செய்கின்ற போது அதிகமான விளைச்சலை பெற முடியவில்லை,  இயற்கையான விளைச்சல் நமக்கு கிடைப்பதில்லை.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு இங்கே இருக்கின்ற மூத்த அமைச்சர்களோடு கலந்து பேசி வண்டல் மண் தமிழ்நாடு முழுவதும் விவசாய பெருங்குடி மக்கள் அள்ளுவதற்கு ஒரு ஆணையை பிறப்பித்து தங்கு தடையில்லாமல் இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் வண்டல் மண் அள்ளப்படுகிறது.  முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் கொடுத்தோம்.  1509 ஏரிகள் தூர்வாருவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதன்முதலாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதை துவக்கி வைத்தேன். மற்ற மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் துவக்கி வைத்தார்கள். அந்தப் பணி முடியும் தருவாயில் இருக்கிறது. மீண்டும் அந்தப் பணி துவங்குவதற்காக 2065 ஏரிகள் 300 கோடி ரூபாய் இன்றைக்கு தூர்வாருவதற்கான நடவடிக்கையை அம்மாவினுடைய அரசு எடுத்து இருக்கின்றது.  இந்த தூர்வாருவதன் மூலமாக குளங்கள் ஆழப்படுகிறது,  அதனால் பெய்கின்ற மழை முழுவதும் சேமித்து வைக்கப்படுகின்றது.  அதோடு அந்த ஏரி குளங்களில் அள்ளப்படுகின்ற வண்டல் மண் இயற்கை உரமாக விவசாயிகளுக்கு கிடைக்கின்றது.  மண்ணை வளப்படுத்துகின்றது.  விளைச்சலை அதிகமாக பெறுவதற்கு அம்மாவினுடைய அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கின்றேன்.

அம்மாவினுடைய அரசு சாலைகள், பாலங்கள், கல்லூரிகள் என பல்வேறு திட்டங்களை அறிவித்து கொண்டிருக்கின்றது.  கடுமையான வறட்சி, 140 ஆண்டு காலம் இல்லாத கடுமையான வறட்சி, மழையே இல்லை,  குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காத ஒரு சூழ்நிலை, எவ்வளவுதான் அரசாங்கம் திட்டம் போட்டு நிதி ஒதுக்கீடு செய்தாலும், இன்றைக்கு தண்ணீர் 1000 அடிக்கு கீழே போய்விட்டது, 1000 அடிக்கு கீழ் இருந்து தான் நீரை எடுத்து மக்களுக்கு குடிநீர் வழங்கவேண்டிய ஒரு சூழ்நிலை. இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையிலும், இவ்வளவு கடுமையான வறட்சியிலும் நமக்கு 38 சதவிகிதம் மழை தான் பொழிந்திருக்கின்றது, 62 சதவிகிதம் மழை பொழியவில்லை.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்து, தமிழகத்திலே குடிநீர் பிரச்சினை இல்லாமல் பார்த்து கொண்ட அரசு, அம்மாவினுடைய அரசு என்பதை மகிழ்ச்சியோடு இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல இன்றைக்கு  அம்மா அவர்கள் சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ்   அறிவிக்கப்பட்ட அத்தனை திட்டங்களும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அம்மா அவர்கள் இந்த விதியின் மூலமாக நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி இருக்கிறார்கள்.  இன்றைக்கு அம்மா அவர்கள் 110 என்று அறிவித்தாலே மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். சட்டமன்ற நிகழ்ச்சி நடைபெற்றபோதெல்லாம் மக்கள் பேப்பரை பார்ப்பார்கள்,  இன்றைக்கு என்ன செய்தி வந்திருக்கிறது,  அம்மா அவர்கள் சட்டமன்ற பேரவை விதி 110ன் கீழ் என்ன அறிவிப்பை கொடுத்திருக்கிறார்கள், நம்முடைய பகுதிக்கு என்ன திட்டம் வந்திருக்கிறது என்று ஆச்சரியத்தோடு பார்ப்பார்கள்.

ஆகவே, அம்மா அவர்கள் சட்டமன்றம் நடக்கின்ற போதெல்லாம் சட்டப்பேரவை விதி 110ன் கீழ் பல்வேறு அற்புதமான திட்டங்களை அறிவித்து நாட்டு மக்களுடைய வாழ்க்கைத்தரம் உயர, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றியவர்  அம்மா அவர்கள் தான்.  இன்றைக்கு அம்மா வழியில் வந்த அம்மாவினுடைய அரசும்,  சட்டமன்ற பேரவை விதி 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை தந்திருக்கிறது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியினை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல மேடையில் வீற்றிருக்கினற அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அமராவதி ஆற்றிலே தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது, படிப்படியாக உயர்ந்து கொண்டிருக்கிறது, ஆகவே எங்களுக்கு தண்ணீர் கால்வாய்களிலும், ஆற்றிலும் திறந்துவிட வேண்டும், குடிதண்ணீர் வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறார்கள்.  அம்மாவினுடைய அரசு கனிவோடு பரிசீலித்து இதையும் செய்யும் என்பதை மகிழ்ச்சியோடு இந்தத் தருணத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். 

இன்றைக்கு குடிநீர் பிரச்சினை மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அம்மா அவர்கள் ஆட்சியில் இருக்கின்ற போது தான் காவிரி நீரை பெற்று தந்தார்கள்.  சட்டப்போராட்டத்தின் மூலமாக நமக்கு சட்ட அங்கீகாரத்தை பெற்று தந்த ஒரே தலைவி அம்மா அவர்கள்.  இன்றைக்கு தமிழகத்திலே ஜீவநதியாக இருப்பது காவிரி நதி.  அந்தக் காவிரி நதியிலிருந்து தான் பாசனத்திற்கு, குடிநீருக்கு நீரை எடுத்துப் பயன்படுத்தி வருகின்றோம். கடுமையான வறட்சி காரணமாக கடந்த முறை மேட்டூர் அணை வறண்டு விட்டது.  குடிநீர் பிரச்சினை, பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விடவில்லை.  இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு வழக்கு நடைபெற்று கொண்டு இருக்கிறது.  நிச்சயமாக அம்மாவினுடைய ஆசியோடு வெற்றி பெற்று நமக்கு நீதி கிடைக்கும் என்று இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.  “பயனாளிகள்  வாழ்வில் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற” எனது  வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.