அனைவரும் அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வு வாழ வேண்டும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

அனைவரும் அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வு வாழ வேண்டும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

ஆகஸ்ட் 25 , 2017 ,வெள்ளிக்கிழமை,

சென்னை : மக்கள் அனைவரும் அமைதியான, மகிழ்ச்சியான பெருவாழ்வு வாழ வேண்டும் என்று விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள “விநாயகர் சதுர்த்தி” வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

முழுமுதற்கடவுளான விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேண்டியவருக்கு வேண்டியதை அளிக்கும் யானை முகத்தான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி திருநாளன்று, மக்கள் களிமண்ணால் செய்த விநாயகர் சிலையை வைத்து, அருகம் புல், எருக்கம் பூ, அரளி மலர் கொண்டு மாலைகள் சூட்டி, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், கரும்பு, பழங்கள் போன்றவற்றை படைத்து, அனைத்து நலங்களையும் வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட ஐங்கரத்தானை பக்தியுடன் வணங்கி, மக்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி மகிழ்வார்கள்.

தடைகளை தகர்த்திடும் விக்னேஸ்வரரின் கருணையால், தொடங்கும் அனைத்து நற்காரியங்களிலும் வெற்றி பெற்று, மக்கள் அனைவரும் அமைதியான, மகிழ்ச்சியான பெருவாழ்வு வாழ வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.