அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஹிலாரி கிளிண்டனுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து கடிதம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஹிலாரி கிளிண்டனுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து கடிதம்

சனி, ஜூன் 18,2016,

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹிலாரிக்கு முதல்வர் ஜெயலலிதா, வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதம்:

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ள தங்களுக்கு, நான் தெரிவிக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டு மிகப்பெரிய அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களில், தாங்கள் முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளீர்கள். இது உலகத்தில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் குறிப்பாக ஜனநாயக தேர்தல் முறையிலான அரசியலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு மிகவும் பெருமையையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியதாகும்.

உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு உரிய அதிகாரத்தை அளிக்கும் விஷயத்தில் உங்களது குரலை ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறீர்கள். தாங்கள் கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதியன்று சென்னைக்கு பயணம் மேற்கொண்டபோது சந்தித்தோம். அதன் நினைவுகள் இப்போதும் நிழலாடுகிறது. அப்போது பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இருவரும் சுமுகமான முறையில் விவாதித்துக் கொண்டோம்.

வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கும், அதற்கு முன்னதாக உள்ள தேர்தல் பிரசாரம் போன்ற பல்வேறு நிலைகளிலும் தாங்கள் சிறப்பாகப் பணியாற்ற எனது வாழ்த்துகள். தங்களது அரசியல் வாழ்வில் தாங்கள் மென்மேலும் உயருவீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு தாங்கள் ஒரு முன்மாதிரியாக விளங்குவீர்கள் என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.