அம்மா உணவகங்கள் மற்றும் மாநகராட்சி சார்பில் நிறைவேற்றப்பட்டுவரும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்கு சீன நகராட்சிக் குழுவினர் பாராட்டு

அம்மா உணவகங்கள் மற்றும் மாநகராட்சி சார்பில் நிறைவேற்றப்பட்டுவரும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்கு சீன நகராட்சிக் குழுவினர் பாராட்டு

ஞாயிறு, ஜூலை 10,2016,

சீன நாட்டில் உள்ள Chongqing நகர உள்ளாட்சி மக்கள் அமைப்பின் தலைவர் திரு. சூ ஜிங்கி தலைமையில் வருகை தந்த ஐவர் குழுவினர், முதலமைச்சர் ஜெயலலிதாவின் புரட்சிகர திட்டமான “அம்மா உணவகம்” பற்றி ஆர்வமாக கேட்டறிந்தனர். மேலும், மாநகராட்சி சார்பில் குப்பை அகற்றுவது, பயோ மெட்ரிக் மூலம் தொழிலாளர்களின் வருகை பதிவேடு பதிவு செய்யப்படுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மே மாதம் 15-ம் தேதி சீன நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் அந்நாட்டின் பிரதமர் முன்னிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கும், Chongqing மாநகரத்திற்கும் இடையே செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில், Chongqing நகர உள்ளாட்சி மக்கள் அமைப்பின் தலைவர் திரு. சூ ஜிங்கி தலைமையில் வருகை தந்த ஐவர் குழுவினர், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திரு. சைதை துரைசாமி, ஆணையர் முனைவர் தா. கார்த்திக்கேயன் ஆகியோரை சந்தித்தனர். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பை அகற்றம், பயோ மெட்ரிக் மூலம் தொழிலாளர்களின் வருகைப் பதிவேடு, GPS கருவி மூலம் வாகனங்கள் கண்காணிப்பு, ஆன்லைன் மூலம் குப்பைகள் சேகரிப்பு கண்காணிப்பு குறித்து சீன குழுவினரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள சிறப்பான திட்டங்களில் ஒன்றான அம்மா உணவகத்தின் செயல்பாடு குறித்தும் விவரிக்கப்பட்டது. வரும் நவம்பர் மாதம் Chongqing மாநகராட்சியில் நடைபெறவுள்ள சீன சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு மேயருக்கும், ஆணையருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.