அம்மா முழு உடல் பரிசோதனை: முதல் நாளில் 30 பேருக்கு பரிசோதனை

அம்மா முழு உடல் பரிசோதனை: முதல் நாளில் 30 பேருக்கு பரிசோதனை

வியாழன் , மார்ச் 03,2016,

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள “அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டத்தின்’ கீழ் செவ்வாய்க்கிழமை 30 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறைந்த செலவில் முழு உடல் பரிசோதனை செய்வதற்கான அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
அரசு மருத்துவமனை: தமிழகத்திலேயே முதன்முதலில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் செயல்பட்டு வந்த பிணவறை, புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து அந்தக் கட்டடம் முழுவதும் சீரமைக்கப்பட்டு, உள் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முழு உடல் பரிசோதனை செய்யும் இடமாக மாற்றப்பட்டது.
ரூ. 10 கோடி: ரூ. 10 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் ரத்தம், சிறுநீரகம், ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு, கல்லீரல் செயல்பாடு, ஹெபடைடிஸ் பி, ரத்தப் பிரிவு உள்ளிட்ட அடிப்படை பரிசோதனைகளும், நெஞ்சு சுருள்படம், ஊடுகதிர் படம், தைராய்டு, மிகையொலி, இதய மீள் ஒலி, சிறப்பு சர்க்கரை நோய் பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகின்றன.
ஆயிரம் ரூபாய் மதிப்பில் “கோல்ட்’ பரிசோதனையும், ரூ. 2 ஆயிரம் மதிப்பில் “டைமன்ட்’ பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. முதல் நாளான புதன்கிழஸ்ரீஜ் 16 பேருக்கு “கோல்ட்’ பரிசோதனையும், 2 பேருக்கு ‘டைமண்ட்’ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மகளிர் சிறப்பு பரிசோதனை: மகளிருக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனையில் அடிப்படை பரிசோதனைகளுடன் கருப்பை வாய், மார்ப்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, எலும்பு அடர்த்தி பரிசோதனை, பாரா தைராய்டு ஹார்மோன் பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகின்றன. மகளிருக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனைக்கான கட்டணம் ரூ. 3 ஆயிரம் ஆகும். முதல்நாளில் 11 பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
சாப்பிடும் இடம்: பரிசோதனை மேற்கொள்பவர்கள் காலையில் வெறும் வயிற்றுடன் பரிசோதனைக்கு வர வேண்டும். அதன்பின்பு ரத்தம், சிறுநீர் உள்ளிட்டவற்றின் மாதிரியைக் கொடுத்த பின்பு, உணவு சாப்பிட்டுவிட்டு, மீண்டும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். எனவே பொதுமக்கள் உணவை சாப்பிடுவதற்கு என்று தனி அறை உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு கை கழுவும் வசதி, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் நோயாளிகள் இளைப்பாறுவதற்கும் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.