அம்மா வழியில்,குழந்தைத் தொழிலாளர் முறையை களைந்திடிம் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது : முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி

அம்மா வழியில்,குழந்தைத் தொழிலாளர் முறையை களைந்திடிம் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது  : முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி

ஜூன் 12, 2017,திங்கள் கிழமை,  

சென்னை : குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் களைந்திட, மாண்புமிகு அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், மாண்புமிகு அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு, குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் களைந்திடவும், அறிவும், வலிமையும் பொருந்திய புதிய தலைமுறையை உருவாக்கிடவும், கட்டணமில்லா கல்வி, விலையில்லாப் பாடப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், விலையில்லா மிதிவண்டிகள், மடிக்கணினிகள், இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகை, போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தற்போது மத்திய அரசால் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரையும் அபாயகரமான பணிகளில் அமர்த்தப்படுவது முற்றிலுமாக தடை செய்து வெளியிட்ட சட்டத் திருத்தத்தையும் தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளின் உரிமைகளை மதித்து, குழந்தைத் தொழிலாளர் இல்லா மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையினை எய்திட இந்த அரசு மேற்கொள்ளும் சீரிய முயற்சிகளுக்கு பெற்றோர்களும், பொதுமக்களும், தொழில் நிறுவனங்களும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென, முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.