அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்: அ.தி.மு.க.தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை

அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்: அ.தி.மு.க.தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை

சனி, பெப்ரவரி 27,2016,

அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்று அ.தி.மு.க.வினருக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி தஞ்சாவூர் அதிமுகவின் தெற்கு மாவட்டத்தின் சார்பில் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் 164 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.  இந்த திருமண விழாவிற்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பியுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:- இந்த திருமண நிகழ்ச்சியில் இல்லறம் ஏற்கின்ற மணமக்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு 68 வகையான சீர்வரிசைப் பொருட்களும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்புகளாகத் திகழும் கறவைப் பசுவும் கன்றும் ஒவ்வொரு ஜோடி மணமக்களுக்கும் வழங்கப்படுகின்றன என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இல்லற வாழ்வு என்னும் புதிய அனுபவத்திற்குள் செல்லுகின்ற மணமக்களுக்கு வாழ்க்கையில் எல்லா நலன்களும் அமைந்திட வேண்டும் என்பது என்னுடைய பிரார்த்தனை. செம்மண் நிலத்தில் பெய்கின்ற மழை நீர் அந்த மண்ணின் நிறத்தை நிரந்தரமாகப் பெறுவதைப்போல கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் அன்புடன் ஏற்றுக்கொண்டு நிரந்தரமாய் நேசித்து வாழவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். தமிழகத்தில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்ற உள்ள தருணத்தில் இந்தத் திருமண விழா நடைபெறுகிறது. விழாவில் கலந்துகொண்டுள்ள நீங்கள் என்னுடைய தலைமையில் நடைபெறும் அரசு, மக்களுக்கு ஆற்றிவரும் ஒப்பற்ற பணிகள் அனைத்தையும் பற்றி எல்லோருக்கும் எடுத்துச் சொல்லி கட்சியின் வெற்றிக்கு உங்களது பங்களிப்பினை வழங்கிட வேண்டும் என்ற கேட்டுக் கொள்கிறேன். திருமணத்தை நடத்த நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு என்னுடைய பாராட்டுகள். இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.