அரசு திட்டங்களைப் பயன்படுத்தி வளம் பெறுங்கள் : கைத்தறி நெசவாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

அரசு திட்டங்களைப் பயன்படுத்தி வளம் பெறுங்கள் : கைத்தறி நெசவாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

ஞாயிறு, ஆகஸ்ட் 07,2016,

அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெற வேண்டும் என்று கைத்தறி நெசவாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய கைத்தறி தினத்தையொட்டி நெசவாளர்களுக்கு அவர் நேற்று சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஆண்டு முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி, தேசிய கைத்தறி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் பொருளாதாரத்திலும், தொழில் உற்பத்தியிலும் ஜவுளித் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் குறிப்பாக கைத்தறி முக்கியப் பங்கு வகிக்கிறது. கைத்தறித் துறையை மேம்படுத்தவும், நெசவாளர்கள் வாழ்வு வளம் பெறவும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

கைத்தறி நெசவாளர்களுக்கு சூரிய சக்தியுடன்கூடிய 10 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நெசவாளர்களுக்கு பெடல் தறிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், கூட்டுறவு சங்கங்களுக்கு மின்சார பாவு சுற்றும் இயந்திரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

பட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் வேலைப் பளுவைக் குறைத்து உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஜக்கார்டு பெட்டி, மின் மோட்டார் பொருத்திய தார் சுற்றும் இயந்திரங்கள் ஆகியன நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அளிக்கப்படுகின்றன.

நெசவாளர்கள் தொழில் முதலீடு, நடைமுறை மூலதனக் கடன் பெறும் வகையில் நெசவாளர்களுக்கான கடன் அட்டை அளிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் மாத ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. குடும்ப ஓய்வூதியமும் அதிகரிக்கப்ப்டடுள்ளது.

தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டபடி, கைத்தறி நெசவாளர்களுக்கு இரு மாதங்களுக்கு கட்டணமில்லாமல் 100 யூனிட் அளவுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம், 200 யூனிட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. கைத்தறி துறைக்கும், நெசவாளர்களுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதன் பயனாக 1,161 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 1,011 சங்கங்கள் லாபத்தில் இயங்கி வருகின்றன.

கைத்தறி நெசவாளர்கள் அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி தங்களது வாழ்வில் வளம் பெற வாழ்த்துகள் என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.