அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்,9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்,9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஜூலை ,21 ,2017 ,வெள்ளிக்கிழமை,

சென்னை : தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் வழங்கப் படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் அறிவித்துள்ளார். மேலும் தலா ரூ.2 லட்சம் செலவில் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டம் அடுத்த கல்வி ஆண்டிலிருந்து படிப்படியாக மாற்றப்பட உள்ளது. இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் புதிய பாடத்திட்டம் குறித்த கருத்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கை தொடங்கிவைத்து பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

கல்வித் துறையில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக முன்னேற்றுவதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் பள்ளியிலேயே தேர்வு எழுத வசதியாக கூடுதலாக 200 தேர்வு மையங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து வகையான நுழைவுத் தேர்வுகளையும் தமிழக மாணவர் கள் எதிர்கொள்ளும் வகையில் 54 ஆயிரம் வினா-விடைகளைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் தயாரித்து விரைவில் வழங்க உள்ளோம்.

தமிழகத்தில் 40 ஆயிரம் தனியார் சுயநிதி பள்ளிகள் இயங்கி வருகின்றன. அங்கு அளிக்கப்படும் கல்வித்தரத்துக்கு மேலாக அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். சீருடை மாற்றம், தலா ரூ.2 லட்சம் செலவில் 3 ஆயிரம் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள், 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், பள்ளி வளாகத்தில் வை-பை வசதி போன்ற திட்டங் களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் பாடத்திட்டத்துக்கு இணையாகவும் அதேநேரத்தில் தமிழர்களின் பாரம் பரியம், கலாச்சாரம், பண்பாடு தொன்மை முதலான அம்சங் களுடனும் தமிழக பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்என்று  அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

இந்த கருத்தரங்க தொடக்க விழாவில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகநாதன், செயலாளர் எம்.பழனிச்சாமி, பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், தொடக்கக்கல்வி இயக்குநர் எஸ்.கார்மேகம், ஆர்எம்எஸ்ஏ திட்ட மாநில இயக்குநர் எஸ்.கண்ணப்பன், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உட்பட ஆசிரியர்கள், கல்வியாளர்கள், தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர் அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.