அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லிதோப்பு தொகுதிகளுக்கான தேர்தல் ; அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லிதோப்பு தொகுதிகளுக்கான தேர்தல் ; அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல்

சனி, அக்டோபர் 29,2016,

சென்னை – தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் என தமிழகத்தில் 3 தொகுதிகளிலும், புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதியிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  வரும் 19-ம் தேதி தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியின் நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேற்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தஞ்சாவூரில் எம்.ரங்கசாமி, அரவக்குறிச்சியில் வி.செந்தில் பாலாஜி, திருப்பறங்குன்றத்தில் ஏ.கே.போஸ், நெல்லித்தோப்பில் ஓம்.சக்தி சேகர் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்கள், முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க நேற்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதன்படி, அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் திரு. வி.செந்தில் பாலாஜி, தேர்தல் நடத்தும் அலுவலர் திரு. சைபுதீனிடம், வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தஞ்சாவூர் தொகுதி கழக வேட்பாளர் திரு. எம்.ரெங்கசாமி, தஞ்சை ரயிலடியில் உள்ள கழக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கும், பழைய பேருந்து நிலையம் அருகேவுள்ள அண்ணா சிலைக்கு மாலைகள் அணிவித்த பின்னர், தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தொகுதிக்கான தேர்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான திரு. C. சுரேஷிடம், வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதி கழக வேட்பாளர் திரு. ஏ.கே. போஸ் தனது வேட்பு மனுவை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.

புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. ஓம்சக்தி சேகர் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் திரு. மலர் கண்ணனிடம் தாக்கல் செய்தார்.