அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது

ஞாயிறு, நவம்பர் 20,2016,

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு அமைதியாக அமைதியாக நடந்து முடிந்தது.இதன் முடிவுகள் 22-ம் தேதி  அறிவிக்கப்படும்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவு அமைதியாகவும், நேர்மையாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் வாக்காளர்கள் எந்த அச்சமுமின்றி தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில், சின்னதாராபுரம் டி.வெங்கடபுரம், மலைக்கோவிலூர், காகித ஆலை மெட்ரிக் பள்ளி, ஈசநத்தம், எருமப்பட்டி, பெரிய மஞ்சுவாளி, தென்னிலை, பரமத்தி, சீத்தபட்டி காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

இதேபோன்று, தஞ்சாவூர் தொகுதிக்கு உட்பட்ட அரண்மணை, கரந்தை, பிள்ளையார்பட்டி, நாணயக்கார செட்டி தெரு, தெற்குகீழ அலங்கம் மற்றும் வல்லம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வாக்கு பதிவு அமைதியாக நடைபெற்றது. புதிய தலைமுறை வாக்காளர்கள், இஸ்லாமிய பெருமக்கள், விவசாயிகள், பெண்கள் உட்பட அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். கருணாநிதி நகர் பகுதியில் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் வாக்களித்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதி முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. சிலைமான், புளியங்குளம், தோப்பூர், பெருங்குடி, அவனியாபுரம், தனக்கன்குளம், சிந்தாமணி, அனுப்பானடி, பனையூர், சாமநத்தம், நாகமலைபுதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்கள் காலைமுதலே ஆர்வதுடன் திரண்டு, தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

இதேபோன்று, புதுச்சேரி மாநிலம் நெல்லித் தோப்பு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், காலை முதலே வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இளம் வாக்காளர்கள் பலர், வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.  4 தொகுதிகளிலும், வாக்குப்பதிவு முடிவடைந்ததையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். 22-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. அன்று பகல் 12 மணிக்குள் முடிவுகள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக ஏ.கே.போஸ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க வேட்பாளராக டாக்டர் சரவணன் போட்டியிட்டார். கரூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக செந்தில்பாலாஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக கே.சி.பழனிசாமி போட்டியிட்டார். தஞ்சாவூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக எம்.ரெங்கசாமி போட்டியிட்டார். தி.மு.க வேட்பாளராக டாக்டர். அஞ்சுகம் போட்டியிட்டார். புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக ஒம்சக்தி சேகர் போட்டியிட்டார். தமிழகத்தில் மொத்தம் 73.71 சதவீதமும், புதுவை நெல்லித்தோப்பு தொகுதியில் 85.76 சதவீத வாக்குகளும் பதிவாகின.