அருப்புக்கோட்டையில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம்

அருப்புக்கோட்டையில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம்

வெள்ளி, ஏப்ரல் 15,2016,

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து இரட்டைஇலை சின்னத்தில் வாக்கு கேட்டு இன்று வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் பிரச்சாரம் செய்கிறார்.   இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பலலட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இன்று முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார். இதை முன்னிட்டு அருப்புக்கோட்டை காந்தி நகர் பைபாஸ் சாலையில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பல லட்சம் பேர் அமரக் கூடிய பிரம்மாண்டமான பந்தல், மேடை, தோரணங்கள் அமைக்கும் பணியில் கடந்த சில தினங்களாக 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். மேடை அருகில் முதல்வர் வந்து இறங்கி பிரச்சாரம் செய்வதற்கு ஹெலிபேடு தளம் அமைக்கப்பட்டுள்ளது.  அங்கிருந்து மேடைக்கு முதல்வர் காரில் செல்கிறார். கார் பார்க்கிங் மற்றும் வி.ஐ.பி. கார் பார்க்கிங் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. பைபாஸ் சாலை முழுவதும் அ.தி.மு.க. கொடிகள், தோரணங்கள் கண்ணை கவரும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.

அருப்புக்கோட்டையில் நடைபெறும் அ.தி.மு.க வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, திருச்சுழி, சாத்தூர், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) ஆகிய ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும், சிவகங்கை, பரமக்குடி (தனி), மானாமதுரை (தனி), முதுகுளத்தூர், இராமநாதபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய ஏழு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களையும் ஆக மொத்தம் 14 தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்தும் அவர்களுக்கு இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு கேட்டும், கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசின் திட்டப் பணிகள் மற்றும் சாதனைகளை விளக்கியும் முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார்.

அருப்புக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும் மேடைக்கு முன்பு சுமார் 16 கேபின்களில் லட்சக்கணக்கானோர் அமரக்கூடிய வகையில் சேர்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அ.தி.மு.க தொண்டர்கள் என பல லட்சம் பேர் திரளாக கலந்து கொள்ள உள்ளனர். மதுரை சரக ஐஜி முருகன் தலைமையில் 3000க்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடு;படுத்தப்பட்டுள்ளனர்.