அ.இ.அ.தி.மு.க. 234 தொகுதிகளிலும் வெற்றிபெற இந்திய குடியரசுக் கட்சி மற்றும் நாடார் பேரவை பாடுபடப்போவதாக அறிவிப்பு

அ.இ.அ.தி.மு.க. 234 தொகுதிகளிலும் வெற்றிபெற இந்திய குடியரசுக் கட்சி மற்றும் நாடார் பேரவை பாடுபடப்போவதாக அறிவிப்பு

செவ்வாய், மார்ச் 08,2016,

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. 234 தொகுதிகளிலும் வெற்றிபெற இந்திய குடியரசுக் கட்சி மற்றும் நாடார் பேரவை பாடுபடப்போவதாக தெரிவித்துள்ளன.

இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. செ.கு. தமிழரசன், தர்மபுரியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ள பல்வேறு நலத்திட்டங்களை கிராமம் கிராமமாக, வீடு வீடாகச்சென்று மக்களிடம் எடுத்துக் கூறி, திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாகத் தெரிவித்தார். 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கு இந்திய குடியரசுக் கட்சி முழுமையாக பாடுபடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அ.இ.அ.தி.மு,க. அரசின் 5 ஆண்டுகால மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டு விளக்கிய அவர், தமிழக அரசின் திட்டங்களையும், தமிழகத்தின் 5 ஆண்டுகால சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து மத்திய அரசு பாராட்டியுள்ளதையும் சுட்டிக்காட்டினார். மேலும், தமிழகத்தில் மக்கள் நல அரசாக அ.இ.அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வந்துள்ளதையும், ஏழை-எளிய, அடித்தட்டு மக்களுக்கு வழங்கிய மக்கள் நலத்திட்டங்களை மற்ற மாநிலங்கள் பாராட்டி பின்பற்றுவதாகவும் திரு. செ.கு. தமிழரசன் தெரிவித்தார்.

இதேபோல், திருநெல்வேலியில், நாடார் பேரவை சார்பில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. அதன் தலைவர் திரு. நாராயணன் குறிப்பிடும்போது, தமிழகத்தில் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா என்றும், ஏழை-எளிய பெண்களுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம், திருமண நிதியுதவித் திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார் என்றும் பாராட்டு தெரிவித்தார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சராக, 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம்செய்து பிரச்சாரம் மேற்கொள்ளப்போவதாக அவர் குறிப்பிட்டார்.