அ.தி.மு.க அணிகள் ஒன்றாக இணைந்தன : தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம்

அ.தி.மு.க அணிகள் ஒன்றாக இணைந்தன : தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம்

ஆகஸ்ட் 22 , 2017 , செவ்வாய்க்கிழமை,

சென்னை : கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகு அ.தி.மு.க.வின் இரு அணிகளும் நேற்று தங்களை இணைத்துக் கொண்டன. தொண்டர்கள் எதிர்பார்த்தது நேற்று இனிதாக நடந்தது. அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இதற்கான விழா கோலாகலமாக நடந்தது. இணைப்புக்கு பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் இருவரும் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு கவர்னர் மாளிகை புறப்பட்டு சென்றனர். அங்கு துணை முதல்வராக ஒ.பன்னீர்செல்வமும், அமைச்சராக மாஃபா.பாண்டியராஜனும் பதவியேற்று கொண்டனர். அணிகள் இணைந்ததை வரவேற்கும் வகையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

கடந்த பல வாரங்களாக அணிகள் இணைப்புக்கான முயற்சிகள் இரு தரப்பிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் டி.டி.வி.தினகரன் சில நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட்டார். இதனை அடுத்து துணை பொதுச்செயலாளர் (டி.டி.வி.தினகரன்) நியமனம் கட்சி விதிக்கு விரோதமானது என்றும், தினகரனால் வெளியிடப்பட்ட நியமன அறிவிப்புகள் செல்லாது என்றும் இது தொண்டர்களை கட்டுப்படுத்தாது என்றும் முதல்வர் எடப்பாடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து, கூறிய ஒ.பன்னீர் செல்வம் , பாதி வந்துவிட்டார்கள். மீதியும் வந்த பிறகு நல்லது நடக்கும் என்றார். இந்த சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் (வேதா நிலையம்) நினைவில்லமாக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இதனிடையே அணிகள் இணைப்பு குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நீண்ட நேர ஆலோசனை நடைபெற்றது. அவரது கீரின்வேஸ் சாலை இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அவரது அணியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கொண்டனர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டிலும் தீவிர ஆலோசனை நடைபெற்றது.

முன்னதாக இணைப்பு பற்றிய ஆலோசனைகள் இருதரப்பிலும் நடந்து கொண்டிருந்த நேரத்தில் ஜெயலலிதா நினைவிடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். அதேபோல, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்திலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பற்றிய பேச்சு காட்டுத்தீ போல் பரவியதை அடுத்து இரு அணிகளை சேர்ந்த தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

ஆனால், அன்றைய தினம் எதிர்பார்த்தபடி அ.தி.மு.க அணிகள் இணைப்பு நடக்கவில்லை. இதனிடையே மறுநாள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒ.பன்னீர்செல்வம் ஓரிரு நாளில் நல்ல முடிவு ஏற்படும் என்று தெரிவித்தார். இதேபோல் நிதியமைச்சர் ஜெயக்குமாரும் எது நடக்க இருக்கிறதோ, அது நன்றாகவே நடக்கும் என்று கூறியிருந்தார்.

அவர் கூறியபடியே நேற்று நல்லது நடந்தது. அ.தி.மு.க.வின் இரு அணிகளும் நேற்று தங்களை இணைத்து கொண்டன. முன்னதாக, இரு அணிகளிடமும் ஒருமித்த கருத்து உருவானதும் அணிகள் இணைப்பை நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை இரு அணி தலைவர்களும் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் பிற்பகல் 2 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். இதேபோல் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் சிறிது நேரத்தில் தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.

ஒ.பன்னீர்செல்வம் 2.40 மணியளவில் தலைமை அலுவலகம் வந்து சேர்ந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் அணிகள் இணைந்ததை முறைப்படி அறிவித்தனர். ஒரே மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், ஒ.பன்னீர்செல்வம் கைகோர்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதலில் ஒ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது, பேசிய அவர்., இப்போதுதான் தனது பாரம் குறைந்து விட்டது என்று உருக்கமாக பேசினார். கட்சி வளர்ச்சிக்காக பாடுபடப் போவதாகவும் அவர் உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரிந்த பின் இணைந்த ஒரே கட்சி அ.தி.மு.க.தான் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக ஒ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறிய அவர். இணை ஒருங்கிணைப்பாளராக தான் செயல்படப்போவதாக தெரிவித்தார். மேலும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் துணை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்கள் என்றும் தெரிவித்த அவர். கட்சியின் வழிகாட்டும் குழுவில் 11 பேர் இடம்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். அப்போது அங்கே கரவொலி எழுந்தது. பிறகு பேசிய வைத்திலிங்கம் எம்.பி., அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கும் பொருட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், இதற்காக பொதுக்குழு கூடும் என்று அறிவித்தார். இணைப்பு விழா முடிந்ததும் முதல்வர் இ.பி.எஸ். மற்றும் ஒ.பி.எஸ் உள்ளிட்ட தலைவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அண்ணா, எம்.ஜி.ஆர். சமாதிகளிலும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு பதவியேற்பு விழா சரியாக மாலை 4.42 மணிக்கு நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வராக ஒ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் வித்யா சாகரராவ் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதன்பிறகு, அமைச்சராக மாஃபா.பாண்டியராஜன் பதவியேற்றுக்கொண்டார். இந்த விழா சரியாக 10 நிமிடங்களில் நடந்து முடிந்தது. விழாவின் இறுதி கட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரது கரங்களை பிடித்து இணைத்து வைத்தார் கவர்னர். அப்போது அங்கே மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பின்னர், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமை செயலகம் சென்று கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு முதல்வர் இ.பி.எஸ். பொன்னாடை போர்த்தினார். பதிலுக்கு ஓ.பன்னீர்செல்வமும் பொன்னாடை போர்த்தினார்.

ஜெயலலிதா மறைவிற்கு பின் பிரிந்த அ.தி.மு.க-வின் இரு அணிகளும் நேற்று மீண்டும் இணைந்தன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலத்திற்கு வருகை புரிந்த முதல்வர் பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி இணைந்தனர்.

பின்னர் பேசிய ஓ.பி.எஸ், ” ஒரு தாய் சகோதர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் எங்களை யாராலும் பிரிக்க முடியாது. என் மனதில் இருந்த பாரம் இன்றுடன் குறைந்துவிட்டது. ஜெயலலிதாவின் ஆன்மாதான் எங்களை இணைத்தது. தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்பவே இணைந்துள்ளோம். அ.தி.மு.கவின் சாதாரண தொண்டனாக இருந்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவேன். அ.தி.மு.கவின் இணைப்புக்கு முழு ஒத்துழைப்பு தந்த முதல்வர் பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி” என்றார்.

தமிழகத்தின் துணை-முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், ”தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வர் கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும்.

துணை முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரோடு பதவியேற்று கொண்டவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இனிவரும் நாட்களில் தமிழகம் புதிய உயரத்தை அடையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று மோடி தெரிவித்துள்ளார்.

அணிகள் இணைப்பை வெற்றிகரமாக நடத்தி காட்டிய முதல்வருக்கு தொண்டர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நீடித்த இந்த விவகாரம் அணிகள் இணைப்பு மூலம் நேற்று சுமூகமாக முடிந்ததால் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மகளிரணியினர் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக இணைப்பை வரவேற்றனர். ஒருவருக்கொருவர் கைகோர்த்தும், இரட்டை விரலை உயர்த்தி காண்பித்தும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அணிகள் இணைப்பால் கட்சி அலுவலகம் மீண்டும் விழாக்கோலம் பூண்டது.அணிகள் இணைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காகத்தான் நாங்கள் ஏங்கிக்கிடந்தோம். தற்போது எங்களுடைய பலம் அதிகரித்துள்ளதால் வருகிற தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெறுவோம்’’ என்று தொண்டர்கள் கருத்து தெரிவித்தனர்.