அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உணவு தானிய உற்பத்தி 63 சதவீதம் அதிகரிப்பு; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உணவு தானிய உற்பத்தி 63 சதவீதம் அதிகரிப்பு; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

வெள்ளி, ஜூன் 24,2016,

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உணவு தானிய உற்பத்தி 63 சதவீதம் அதிகரித்துள்ளதாக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் முதன்மைத் துறையான வேளாண் துறைக்கு கடந்த 5 ஆண்டுகளில் அளித்த முக்கியத்துவத்தைப் போன்றே மிகுந்த முக்கியத்துவத்தை எனது தலைமையிலான அரசு தொடர்ந்து அளிக்கும்.

வேளாண் துறைக்கும், விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பதற்கும் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாகவே 2015-16-ம் ஆண்டு உணவு தானிய உற்பத்தி 1 கோடியே, 23 லட்சத்து, 47 ஆயிரம் மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2010-11-ம் ஆண்டில் அன்றைய தி.மு.க. ஆட்சியில் உணவு தானிய உற்பத்தி 75.95 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவிலேயே இருந்தது. அதாவது, உணவு தானிய உற்பத்தி எங்கள் ஆட்சிக் காலத்தில் 63 சதவீதம் அதிகரித்துள்ளது.

வட்டி தள்ளுபடி

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தொடர்ந்து வழங்கப்படுவதுடன், பயிர்க்கடனை குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி செய்யும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

66 உபவடிநிலங்களில் 4,778 ஏரிகளை சீரமைத்தல் மற்றும் ஆற்றுப்படுகைகளை மேம்படுத்தி 477 புதிய அணைக்கட்டுகள் மற்றும் தடுப்பணைகள் கட்டுதல், போன்ற பணிகள் உலக வங்கி கடன் உதவியுடன் செயல்படுத்தப்படும். இதற்கென, 2,950 கோடி ரூபாய் திட்டத்திற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

உழவர் பாதுகாப்பு திட்டம்

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 37 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு 3,044 கோடி ரூபாய், அளவிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. “முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம்” தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

கைத்தறி துறைக்கும், நெசவாளர்களுக்கும் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்திய காரணத்தினால் தான் 1,163 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 946 சங்கங்கள் லாபத்தில் இயங்கி வருகின்றன.

எங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, கைத்தறி நெசவாளர்களுக்கு இரு மாதங்களுக்கு கட்டணமில்லாமல் 100 யூனிட் அளவுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் 200 யூனிட்டுகளாகவும் விசைத்தறி நெசவாளர்களுக்கு கட்டணமில்லாமல் 500 யூனிட் அளவுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் 750 யூனிட்டுகளாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.