அ.தி.மு.க கூட்டணி 164 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சி அமைக்கும் -புதிய தலைமுறை நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்

அ.தி.மு.க கூட்டணி 164 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சி அமைக்கும் -புதிய தலைமுறை நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்

செவ்வாய், மே 10,2016,

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 164 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியும், ஏ.பி.டி நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வெறும் 66 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும், மற்ற கட்சிகளுக்கு வெறும் 4 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் மேற்கண்ட கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழக சட்டசபைக்கு வரும் 16-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நூறு சதவீது வாக்கப்பதிவை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே அ.தி.மு.க. கூட்டணி போட்டியிடுகிறது. இது வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு சாதனை. அ.தி.மு.க. கூட்டணி ஒரு அணியாகவும், தி.மு.க.-காங்கிரஸ் ஒரு அணியாகவும், மக்கள் நலக்கூட்டணி – தே.மு.தி.க. ஒரு அணியாகவும் மற்றும் பா.ஜ.க, பா.ம.க, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இவை தவிர மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் சில இடங்களில் போட்டியிடுகிறது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரம் 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி முடிவுற்றது. மறுநாள் வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மே 2-ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசிநாள். அன்றைய தினம் சில மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு, வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இத்தேர்தலை முன்னிட்டு கடந்த சில நாள்களாக தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் ஜெயலலிதா சென்னை தீவுத்திடலில் தனது பிரச்சாரத்தை தொடங்கி, அதன்பிறகு விருத்தாச்சலம், தருமபுரி, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, அருப்புக்கோட்டை, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் தனது அரசு செய்த சாதனைகளை பொதுமக்கள் மத்தியில் பட்டியலிட்டார்.

பின்னர் சிலதினங்களுக்கு முன்பு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார். அதில் அனைவருக்கும் செல்போன், 100 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்கள் ஸ்கூட்டி வாங்க மானியம், தாலிக்கு தங்கம் ஒரு பவுன் வழங்கப்படும் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகள் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.

இதனிடையே சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தொடர்பாக புதிய தலைமுறை செய்தி தொலைகாட்சியும், ஏ.பி.டி நிறுவனமும் இணைந்து ஒரு கருத்துக்கணிப்பை நடத்தின. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி அ.தி.மு.க. கூட்டணி 164 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அதாவது, மீண்டும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசே தமிழகத்தில் அமைகிறது. தி.மு.க. கூட்டணிக்கு 66 இடங்கள்தான் கிடைக்கும் என்றும், மற்ற கட்சிகளுக்கு மொத்தத்திலேயே 4 இடங்கள்தான் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பும், சி.என்.என்.-ஐ.பி.என் கருத்துக்கணிப்பும் அ.தி.மு.க.வுக்கே மெஜாரிட்டி இடங்கள் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.