அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்க வேண்டும் ; முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்க வேண்டும் ; முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

ஞாயிறு, டிசம்பர் 11,2016,

அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பை திருமதி. V.K.சசிகலா ஏற்க அதிமுக பொருளாளரும் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை;

துன்பங்களை பகிர்ந்து கொண்டவர்

அம்மா அவர்களின் நிழலாக இறுதிவரை இருந்து, அம்மா அவர்களின் மெய்க்காப்பாளராக, உயிர் காக்கும் தோழியாக, உன்னத சேவகியாக, உறுதுணையாக நிற்கும் தங்கையாகவே வாழ்ந்து வருபவர் எங்களின் பாசத்திற்குரிய சின்னம்மா . எண்ணில்லாத சோதனைகளையும், வேதனைகளையும் அம்மா  சந்தித்த காலகட்டங்களில், அம்மா அவர்களுடன் உற்ற துணையாக இருந்து அந்த துன்பங்களை பகிர்ந்து கொண்டவர் சின்னம்மா .

அம்மா  மீதும், சின்னம்மா மீதும், பொய் வழக்குகள் போடப்பட்டு, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வி சிறைவாசம் மேற்கொண்ட நேரத்தில், அம்மா அவர்களுடன் சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தவர் சின்னம்மா . அம்மா அவர்களுடன் 33 ஆண்டு காலம், இணைந்து நின்று அம்மா அவர்களின் சிந்தனையை, செயலாற்றலை, தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருப்பவர் சின்னம்மா.

தொண்டர்களை அறிந்து வைத்திருப்பவர்

அம்மா  இந்த இயக்கத்தின் நிர்வாகிகளை மட்டுமல்ல தொலை தூர ஊரின் கடைகோடி கிராமத்தில் கழகக் கொடியை ஏந்தி நிற்கும் சாதாரண தொண்டனைக் கூட அறிந்து வைத்திருந்தார்கள். அம்மா அவர்களது கூடவே இருந்து அம்மா அவர்களைப் போலவே இந்த இயக்கத்தின் தொண்டர்களை அறிந்து வைத்திருப்பவர் சின்னம்மா .

தலைமை ஏற்க அழைப்பு

இந்த இயக்கத்தை அம்மா  வைத்திருந்த அதே கட்டுக்கோப்புடன் ஒரு ராணுவ அமைப்பு போல் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னால், அதற்கு ஒரே வழி சின்னம்மா, இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆகி வழிநடத்துவது ஒன்றே ஆகும். இந்தக் கருத்திற்கு ஒரு மாற்றுக் கருத்து இந்த இயக்கத்தில் இல்லை. அப்படி ஒரு மாற்றுக் கருத்து கொண்டிருப்பவர் எவரேனும் இருந்தால், அவர் இந்த இயக்கத்தின் தொண்டன் இல்லை, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிள்ளை இல்லை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்பு இல்லை. அதனால்தான், அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிறைவு செய்திட, கழக முன்னணியினர், சின்னம்மாவை சந்தித்து தலைமை ஏற்க வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறோம்.

கடந்த 33 ஆண்டுகளாக அம்மா அவர்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர் சின்னம்மா . அதனால்தான் அம்மா அவர்களே, தன்னைப் பெற்றெடுத்த தாயின் இடத்தை சின்னம்மா நிரப்பியுள்ளார் என்று புகழ்ந்துரைத்தார். அம்மா அவர்களின் வார்த்தைகளிலே சொல்ல வேண்டும் என்றால், “என் மீதான விசுவாசத்தின் காரணமாகவே, மற்றவர்களால் மிக தவறாக சித்தரிக்கப்பட்ட, புரிந்து கொள்ளப்பட்ட பெண்மணி அவர். எனக்காக அவர் மிகவும் சிரமங்களை அனுபவித்துள்ளார். என்னுடனான நட்பு மட்டும் இல்லை என்றால், அவரை இந்த அளவு யாருமே தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள். என்னுடன் பிறக்காத சகோதரி அவர். என் அம்மாவின் இடத்தை நிரப்பிய பெண் அவர்” என்று சின்னம்மா  குறித்து அம்மா அவர்களே எடுத்துக் கூறியிருக்கிறார்கள். புரட்சித்தலைவி அம்மா  மீது சின்னம்மா  கொண்டுள்ள பற்றுக்கும், பாசத்திற்கும் இதைவிட வேறு அத்தாட்சி தேவையில்லை.

அப்படிப்பட்ட சின்னம்மா அவர்களை இகழ்ந்து உரைத்து, ஏளனம் செய்து, ஏகடியம் பேசி மனசாட்சியே இன்றி பொய்யான வதந்திகளைப் பரப்பி, அவர்களை அரசியலில் ஈடுபடவிடாமல் முடக்கிவிடலாம் என்று சில மூளைமழுங்கிகள் செய்கின்ற முயற்சிதான் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்ற வதந்திகள். இந்த வதந்திகளை பரப்புவதில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ஒன்றரைக் கோடித் தொண்டர்களைக் கொண்ட பேரியக்கமாக உருவாக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்திட வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள ஒரிரு எதிர்க்கட்சிகளின் கைவரிசையும் இருக்கிறது என்று நான் சந்தேகப்படுகிறேன். ஒருபுறம் அம்மா அவர்களை பாராட்டி துயரம் தோய்ந்த இரங்கல் செய்திகளை வெளியிடுவது. மறுபுறம் தனது கட்சியைச் சார்ந்த கோமாளிகளை விட்டு அறிவுக்கு அப்பாற்பட்ட வதந்திகளைப் பரப்புவது என்று அந்த கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.அவர்களது இந்த முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது. பொய் வதந்திகளைப் பரப்பி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி குட்டையைக் குழப்பி மீன்பிடித்து விடலாம் என்று எண்ணுகின்ற அவர்களது ஆசை நிச்சயம் நிறைவேறாது. தமிழக மக்கள் அறிவார்ந்தவர்கள். சிந்தனைத் திறம் மிக்கவர்கள். அவர்களை ஏமாற்ற நினைப்பவர்கள்தான் இதுவரை ஏமாந்துள்ளார்கள் என்பது வரலாறு. அந்த வரலாறு இதற்கும் பொருந்தும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.