‘அ.தி.மு.க.வுக்கு பிரச்சினை வந்தால் உயிரை கொடுத்து காப்பேன்’ ; எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலா பேச்சு

‘அ.தி.மு.க.வுக்கு பிரச்சினை வந்தால் உயிரை கொடுத்து காப்பேன்’ ; எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலா பேச்சு

திங்கட்கிழமை, பிப்ரவரி 13, 2017,

சென்னை : கட்சிக்கு பிரச்சினை வந்தால் உயிரை கொடுத்து காப்பேன் என்றும்,அ.தி.மு.க.வை உடைக்க முயற்சி நடப்பதாகவும், கட்சிக்கு பிரச்சினை வந்தால் உயிரை கொடுத்து காப்பேன் என்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலா பேசினார்.

கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூரில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் சசிகலா நேற்று பேசியதாவது:-

நான் இந்த இயக்கத்தை நடத்த முன் வந்ததுமே, உங்களுக்கு தெரியாதது இல்லை. அந்த அளவுக்கு நம் எதிரிகள் வலை பின்னுகிறார்கள். எதிரிகள் என்னை பற்றி நிறைய விசாரித்து இருக்கிறார்கள். இவர் எப்படி பட்டவர் என்று விசாரணை நடந்தது. 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவுக்கு தோள் கொடுத்து தளபதியாக இருந்து இருக்கிறார். அவருக்கு நல்ல தகுதி இருக்கிறது. எனவே அவரை நாம் ஜாக்கிரதையாகத் தான் ‘டீல்’ பண்ண வேண்டும் என்று எதிரி கட்சியினரே கூறியிருக்கிறார்கள். அதன் வெளிப்பாட்டைத் தான் இப்போது நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

பன்னீர்செல்வம் என்று ஒருவர் இருக்கிறார். அவரையும் என்னையும் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். அவர் எதை சொன்னாலும் தலையை ஆட்டிக் கொண்டு சொன்னதை கேட்பார் என்று நினைக்கிறார்கள். என்னை பார்த்தால் சிங்கத்துடன் இருந்தவர். குட்டி சிங்கம் வந்து விட்டது. அ.தி.மு.க.வுக்கு புது குட்டி சிங்கம் வந்து விட்டது, இதை எப்படி சமாளிப்பது, எனவே இப்போதே மீன் பிடிப்பதை போல் வலை வீசுகிறார்கள். இந்த சிங்கம் எத்தனை வலை வந்தாலும், கிழித்து வெளியே வரும். சிங்கத்துடன் இருப்பது சிங்கங்கள் தான் இது அவர்களுக்கு தெரியவில்லை. சிங்கத்துடன் சிங்க குட்டிகள் தான் வரும். ஒரு சிங்கம் இல்லை என்றால், இன்னொரு சிங்கம் வரும். இதை ஜெயலலிதா நமக்கு கற்றுக் கொடுத்து இருக்கிறார்.

அ.தி.மு.க. ஆட்சியை எப்படியாவது கலைத்து விடலாம் என்று நினைத்து சில எட்டப்பர்கள் செயல்படுகிறார்கள். அவர்களை வைத்து செய்து விடலாம் என்று நினைக்கிறார்கள். இங்கு இருப்பவர்கள் தான் அரசாங்கம். அதை அமைக்க கூடியவர்கள் நாம். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நமக்கு துணையாக இருக்கிறார்கள்.

ஒரே ஒரு மந்திரத்தை நினைத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக இருந்தவர்களை இந்த அளவுக்கு உயர்த்தி காட்டியவர் நம் அம்மா. நம்மை அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். எல்லோரும் சுதந்திரமாக இருக்கிறார்கள். அரசை யாரும் எந்த நேரத்திலும் தடை போட்டு நிறுத்தி விட முடியாது. 129 எம்.எல்.ஏ.க்கள் கடல் போல் இருக்கிறார்கள். இதை தடுப்பணை போட்டு தடுக்க முடியாது.

அ.தி.மு.க.வையும், அதனுடைய ஆட்சியையும் எந்த முயற்சி செய்தாலும் அழிக்க முடியாது. அதில் அவர்கள் தோற்றுத் தான் போவார்கள். நீங்கள் எல்லோரும் சிங்கங்கள் தான். நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது. உங்களிடம் (எம்.எல்.ஏ.க்கள்) வலை போட முடியவில்லை என்றால், உங்கள் குடும்பத்தில் வலை போடுவார்கள். நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஜெயலலிதா கொடுத்த ஆட்சி தமிழக மக்களுக்கு நன்மை கொடுக்கும் ஆட்சி. அந்த ஆட்சி மூலம் நம்முடைய திட்டங்களை நிறைவேற்றி மக்களின் அன்பை பெற்று பாராளுமன்ற தேர்தலில் வென்று, சட்டமன்ற தேர்தலில் 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது என்று சொல்லும் அளவுக்கு நம்முடைய உழைப்பு இருக்க வேண்டும். நானும் உழைப்பேன். உங்கள் உழைப்பும் தேவை.

புதியவர்களும் இருக்கிறார்கள், பழையவர்களும் இருக்கிறார்கள். இப்போது நடக்கும் நிகழ்வை, ஒவ்வொருவரும் தங்கள் தொகுதிக்கு சென்று இடைப்பட்ட நேரத்தில் நடந்தது என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லி, மக்களிடத்தில் பழகி, பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்று நாம் யார் என்பதை காட்ட வேண்டும். நான் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஜெயலலிதா சமாதிக்கு வந்தபோது, அங்கிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை. ஒரு ஈர்ப்பு சக்தி என்னை இழுத்தது.

அப்போது நான் வேண்டினேன். இந்த இயக்கத்தை தொண்டர்கள் என்னை நம்பி ஒப்படைத்து இருக்கிறார்கள் உங்கள்(ஜெயலலிதா) மீது ஆணையிட்டு சொல்கிறேன். இந்த இயக்கத்தையும், ஆட்சியையும் நிச்சயம், என் உயிர் உள்ளவரை காப்பாற்றிக்கொண்டு இருப்பேன் என்று உறுதி எடுத்துக்கொண்டு தான் வந்தேன். இந்த இயக்கத்தையும் சரி, ஆட்சியையும் சரி எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. இதில் உறுதியாக இருக்கிறேன். கட்சிக்கு பிரச்சினை என்று வந்தால் என் உயிரை கொடுத்து காப்பாற்றுவேன்.

கஷ்டமான நேரத்தில் நாம் வாழ்கிறோம். வசதி வாய்ப்புகளுடன், அமைச்சராக இருந்து, இந்த கட்சியை 2 ஆக பிரிப்பதற்கு முயற்சி செய்யும் பன்னீர்செல்வம் நம் கைகளாலே நம் கண்ணை குத்துகிறார். நீங்கள் என்னுடன் இருந்து அ.தி.மு.க.வை வழி நடத்த வேண்டும். அதை நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நீங்கள் என்னுடன் இருந்தால் அ.தி.மு.க.வை யாரும் எதுவும் செய்ய முடியாது. நம்முடைய ஒற்றுமை தான் முக்கியம். நீங்கள் என்னுடன் பணியாற்றினால் எதையும் நான் சாதிப்பேன். அந்த தைரியம் எனக்கு இருக்கிறது.

இந்த தைரியம் விலை போகாது. யாருக்கும் பயப்பட மாட்டேன். எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன். நான் எந்த நேரத்தில் எந்த முடிவு எடுக்க வேண்டுமோ அதை எடுப்பேன். கலங்க மாட்டேன். சென்னை ஜெயிலையும், பெங்களூர் ஜெயிலையும் பார்த்து இருக்கிறோம். அதில் இருந்து மீண்டு ஆட்சியையும் பிடித்து இருக்கிறோம். பெண் தானே மிரட்டலாம் என்று நினைத்தால், அம்மாகிட்ட முடியவில்லையே? அதைபோல் என்னிடம் முடியாது.

நீங்கள் உறுதி மொழி எடுக்க வேண்டும். நம்முடைய ஆட்சி மீண்டும் தொடங்கி, அம்மா சமாதி போய் அங்கே அமைச்சர்களுடன் போட்டோ எடுத்து கோட்டைக்கு போக வேண்டும் என்பது தான் என் சபதம். நீங்கள் அத்தனை பேரும் இருந்தால், அதை சாதிப்பேன். ஆட்சியை அமைத்ததும் சட்டசபையில் அம்மா படத்தை திறக்கிறோம். அம்மாவுடைய படத்தை சட்டமன்றத்தில் வைக்க வேண்டும். அதை வைக்க விடாமல் இருக்க நம்ம கட்சியில் இருந்தே புறப்பட்டு இருக்கிறார்கள். அம்மா விட்டுச் சென்ற எம்.எல்.ஏ.க்கள் அம்மாவின் விசுவாசி என்பதை நிரூபிக்க வேண்டும். எல்லோரும் கைத்தட்டி அம்மாவின் படத்தை திறக்க வேண்டும். அதை பார்த்தால் தான் என் வாழ்வின் பெரும் பாக்கியமாக கருதுவேன்.

இந்த கட்சியை யாராலும் அழிக்க முடியாது என்று அம்மா சொன்னார்கள். இந்த வாய்ப்பை நழுவ விட்டு கூடாது. தி.மு.க.வினருக்கு சில யோசனை இருக்கிறது. அம்மா படத்தை திறந்து காட்டுவோம். அதை அவர்கள் பார்ப்பார்கள். அதைத் தான் உங்களிடம் தெரிவிக்கிறேன். இடைஞ்சல் வராமல் காப்பது உங்கள் பொறுப்பு. அதுதான் அம்மாவுக்கு கொடுக்கும் பெரிய பரிசு. பொதுச்செயலாளர் பொறுப்பை கொடுத்து இருக்கிறீர்கள். அதில் துளியும் மாறாமல் பொதுச்செயலாளர் என்ற முறையில் கடமையை நிறைவேற்றுவேன். நம்முடைய ஆட்சியை தொடரச் செய்வேன். அதுதான் என் ஆசை. நாம் ஒரே குடும்பமாக இருந்து நம்முடைய தாயின் படத்தை திறக்க வேண்டும்.இவ்வாறு சசிகலா பேசினார்.