ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேட்டை கையாள பயோ மெட்ரிக் முறை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேட்டை கையாள பயோ மெட்ரிக் முறை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், ஆகஸ்ட் 24,2016,

சென்னை : பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை பதிவேட்டை கையாள புதிய தொழில்நுட்ப உத்தியின் அடிப்படையில், 45 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் பயோ மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டசபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு வருமாறு.,

சென்னை மாநகரத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் வீடு இழந்த குடும்பங்களுக்கு, பெரும்பாக்கம் பகுதியிலும், எழில் நகர் பகுதியிலும் குடியிருப்புகள் வழங்கப்பட்டன. பெரும்பாக்கம் பகுதியில் உள்ள 564 பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் எழில் நகர் பகுதியில் உள்ள, 1,127 பள்ளி செல்லும் குழந்தைகள் தங்களது இல்லங்களின் அருகிலேயே கல்வி தொடரும் வகையில் இந்த குடியிருப்புகளில் தலா ஒரு தொடக்கப் பள்ளியும், ஒரு நடுநிலைப் பள்ளியும் தொடங்கப்படும்.

தமிழக மாணவர்களுக்கு ஒரே வகையான தரமான கற்றல் கற்பித்தலைக் கொண்டு சேர்க்கும் வகையில் இன்றையத் தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு மெய்நிகர் வகுப்பறைகள் (வெர்சூவல் கிளாஸ் ரூம்கள் ) ஏற்படுத்தப்படும். முதற்கட்டமாக 770 அரசுப் பள்ளிகளிலும், 11 மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும் மெய்நிகர் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். மேலும், 11 மைய ஆசிரியர்கல்வி பயிற்சி நிறுவனங்களிலிருந்து நடத்தப்படும் வகுப்பறை செயல்பாடுகளை, இணையத் தொடர்பின் வாயிலாக கிராமப்புறப் பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளும் பெற்று மாணவர்கள் பயன் பெறுவர். இத்திட்டத்தினை செம்மையாக செயல்படுத்த கோயம்புத்தூர், பெரம்பலூர் மற்றும் தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு கட்டிடங்கள் மற்றும் தளவாடங்கள், நூலகம் மற்றும் ஆய்வகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதற்கென 33 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

பள்ளிகளில் இணையதளம் வாயிலான கல்வியினை நடைமுறைப்படுத்த பல திட்டங்களை எனது தலைமையிலான அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இதை மேலும் ஊக்குவிக்கும் விதமாக அரசுப்பள்ளிகளில் பயிலும் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் விதமாக, 555 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 3 கணினிகள் கொண்ட கணினி ¨வழிக் கற்றல் மையங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் 40,000 மாணாக்கர்கள் பயன்பெறுவர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு கையாள்வதில் தற்போது உள்ள கையெழுத்திடும் நடைமுறையை மாற்றி புதிய தொழில்நுட்ப உத்தியின்அடிப்படையில் தொட்டுணர் கருவிகளைக் கொண்டு (பயோ மெட்ரிக்) வருகைப் பதிவுமுறை முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும். இதற்கென 45 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.