ஆதிதிராவிடர்,பழங்குடியினர் பயன்பெரும் வகையில் புதிய திட்டங்கள் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஆதிதிராவிடர்,பழங்குடியினர் பயன்பெரும் வகையில் புதிய திட்டங்கள் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , செப்டம்பர் 19,2016,

சென்னை : ரூ 7.50 கோடி செலவில்  துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் 1,000 ஆதிதிராவிட விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஆதிதிராவிட மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு மேலும் ரூ.13 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டங்களை அறிவித்துள்ளார், 

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட  அறிக்கை;

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டு ஏனையோருக்கு இணையான கல்வி மற்றும் வாழ்வாதாரங்கள் பெற வேண்டும் என்பதைக் குறிக்கோளாக கொண்டு பல்வேறு திட்டங்களை  எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி  வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில்,  93 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.  54 விடுதிகள் துவங்கப்பட்டுள்ளன. 1,080 மாணவ, மாணவியர் விடுதிகளில் கட்டமைப்பு வசதிகள் 83 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஆதிதிராவிடர் /பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவ, மாணவியருக்கு கூடுதலாக 1,500 இடங்கள்  ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

பள்ளி மாணாக்கர்களுக்கான விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணாக்கர்களுக்கான உணவுப்படி 450 ரூபாயிலிருந்து 755 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கல்லூரி மாணவ, மாணவியருக்கு உணவுப் படி 550 ரூபாயிலிருந்து 875 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.  கல்லூரி விடுதி மாணவர்களுக்கு 2 அடுக்குக் கட்டில்கள்,  கல்லூரி மாணவியர் விடுதிகளுக்கு சலவை இயந்திரங்கள், முதற்கட்டமாக சில விடுதிகளுக்கு உணவு சமைக்க உதவும் நீராவி கொதிகலன்கள், நீராவி இட்லி குக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணாக்கர்களுக்கு உறையுடன் கூடிய தலையணை வழங்கப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கு மழைக் கோட்டு மற்றும் கம்பளிச் சட்டை வழங்கப்பட்டுள்ளது. 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் 73 பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்  பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 100 மேல்நிலைப் பள்ளிகளில் அறிவுத் திறன் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 
புதிய தொழிற்பயிற்சி கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. சுயநிதி கல்வி நிறுவனங்களில் இலவச மற்றும் கட்டண இருக்கைகளில் அனுமதிக்கப்பட்ட ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணங்களை அரசே ஏற்கிறது. 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் பேணும் வகையில் பின்வரும் புதிய திட்டங்களை செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.

1. சேலம் மாவட்டம், கருமந்துறையில் உள்ள பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிக்கு தனியே விடுதிக் கட்டடம் இல்லாததால், மாணவிகள் ஊராட்சி ஒன்றிய கட்டடங்களில் தங்கி இந்தப் பள்ளியில் பயின்று வருகின்றனர். எனவே, இந்த விடுதிக்கு 3 கோடியே 60 லட்சம்  ரூபாய் செலவில் சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த பள்ளியில் சேர்க்கப்படும் மாணவியரின் எண்ணிக்கையை 135-லிருந்து 200-ஆக உயர்த்தவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
2. வேலூர்  மாவட்டத்தில், ஜவ்வாது மலையில் உள்ள புதூர்நாட்டில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளியில் 700 மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அங்கு  மாணவியர் தங்கிப் பயில அரசு விடுதி இல்லாததை கருத்தில் கொண்டு, 200 மாணவியர் தங்கிப் பயில ஏதுவாக மாணவியர் விடுதி  ஒன்றினை  3 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் கட்ட நான்  உத்தரவிட்டுள்ளேன்.
3. துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் 1,000 ஆதிதிராவிட விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதற்கென மின் வாரியத்திற்கு செலுத்தப்பட வேண்டிய வைப்புத் தொகை 7 கோடியே 50 லட்சம் ரூபாய் தாட்கோ மூலம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு வழங்கப்படும்.
4. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம் அரசவெளி அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட தொடக்கப்பள்ளி கடந்த 32 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த இடத்திலிருந்து நடுநிலைப் பள்ளிகள் வெகு தூரத்தில் அமைந்துள்ளதால், இங்கு பயிலும் மாணாக்கர்கள் 5-ஆம் வகுப்பு முடித்த பின், வெகு தூரத்தில் நடுநிலைப் பள்ளிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.  எனவே, அரசவெளி அரசு பழங்குடியின நல உண்டி உறைவிட தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளியாக நிலை உயர்த்த நான் ஆணையிட்டுள்ளேன். இதனால்,  குடிகம், தேந்தூர், மண்டபாறை மற்றும் புதுப்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களும் பயன் பெறுவர்.  இதற்கென 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். 
5. பழங்குடியினர் நல 306 உண்டி உறைவிடப் பள்ளிகள், 42 பழங்குடியினர் விடுதிகள், இரண்டு ஏகலைவா மாதிரி  உண்டி உறைவிடப் பள்ளிகள் ஆகியவற்றில் மாணாக்கர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வருகைப் பதிவேடு கையாள்வதில் தற்போது உள்ள கையெழுத்திடும் நடைமுறையை மாற்றி புதிய தொழில்நுட்ப உத்தியின் அடிப்படையில் தொட்டுணர் கருவிகளைக் கொண்டு வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன். இத்திட்டம் 1 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
6. கணினி வழி கற்பித்தல், மாணாக்கர்களின் புரிதல் திறன் மேம்படவும்,  பாடங்கள் எளிதில் மனதில் பதியவும் வழி வகுக்கும்.  எனவே,   பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிகளில் கணினி வழி கற்பித்தல் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில், 1 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவில், 25 பள்ளிகளில்  ஒர் அறிவுத் திறன் வகுப்பறை, அதாவது  ஏற்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த நடவடிக்கைகள் மூலம், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சமுதாய மக்கள் கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மேம்பட வழி வகை ஏற்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.