ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? : நாளை இறுதி விசாரணை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? : நாளை இறுதி விசாரணை

செவ்வாய்க்கிழமை, மார்ச் 21, 2017,

புதுடெல்லி : ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக தேர்தல் கமிஷன் நாளை நடத்தும் இறுதி விசாரணையில் அ.தி.மு.க.வின் இரு அணியினரும் நேரில் ஆஜர் ஆகிறார்கள்.

தமிழக முதலமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாள ராகவும் இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு வருகிற ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் சசிகலா அணியின் சார்பில் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் அவைத்தலைவர் மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள்.

இதனால், அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் இவர்களில் யாருக்கு கிடைக்கும்? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் தனது அணியினருடன் டெல்லி சென்று தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியை கடந்த 15-ந் தேதி சந்தித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதற்கு மறுநாள் சசிகலா அணியினர் நசீம் ஜைதியை சந்தித்து, பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை முன்மொழிந்தவர்களே இப்போது அவரது நியமனத்தை எதிர்ப்பதாகவும், இரட்டை இலை சின்னம் தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

அதன்பிறகு, ஓ.பன்னீர்செல்வம் அணியின் அவைத்தலைவர் மதுசூதனன் சார்பில் தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஜெயலலிதாவால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் கட்சியில் சேர்க்கப்பட்டது அ.தி.மு.க. விதிமுறைகளுக்கு முரணானது என்றும், ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட சட்டரீதியாக உரிமை இல்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தொடர்பாக, தங்கள் தரப்பு ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் கூடிய பிரமாண பத்திரங்களை 20-ந் தேதிக்குள் (நேற்று) பதில் அளிக்குமாறு கோரி பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும் மற்றும் டி.டி.வி. தினகரனுக்கும் 17-ந் தேதி தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு சசிகலா தரப்பில் கூடுதல் காலஅவகாசம் கேட்கப்பட்டதை தொடர்ந்து, 21-ந் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு அவரை தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டு உள்ளது.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் 6,000 பேர் கையெழுத்திட்ட பிரமாண பத்திரங்களை அவர்கள் தரப்பு வக்கீல் பாலாஜி சீனிவாசன் நேற்று தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்தார். அந்த பிரமாண பத்திரங்களில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான 11 எம்.பி.க்கள், 12 எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், சில பொதுக்குழு உறுப்பினர்கள் என பல தரப்பினரும் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சசிகலா தரப்பிலும் இதே போன்று ஆதரவை உறுதி செய்யும் பிரமாண பத்திரங்கள் இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இன்று தாக்கல் செய்யப்பட இருக்கும் பிற ஆவணங்களுடன் சேர்த்து இந்த பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும் என்று கருதப்படுகிறது.இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது.

ஏற்கனவே அறிவித்தபடி, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக தேர்தல் கமிஷன் நாளை (புதன்கிழமை) இறுதி விசாரணை நடத்துகிறது. இதில் சசிகலா அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவிக்கிறார்கள். இந்த விசாரணைக்கு பின்னர் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை தேர்தல் கமிஷன் அறிவிக்கும்.