ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : அ.தி.மு.க வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : அ.தி.மு.க வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

வியாழக்கிழமை, மார்ச் 16, 2017,

சென்னை : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க ஆட்சிமன்றக்குழு கூட்டம் சென்னையில் அக்கட்சியின் தலைமைக்கழகத்தில் நேற்று கூடியது. இந்த கூட்டத்தில் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களான அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, துணை பொதுசெயலாளர் டி.டி,வி.தினகரன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், ஜஸ்டீன் செல்வராஜ், டாக்டர் வேணுகோபால் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர், நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் சுமார் 1 மணிநேரம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் அ.தி.மு.க ஆட்சிமன்றக்குழு உறுப்பினரும் அவைத்தலைவருமான செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர், வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறும் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் கட்சியின் துணை பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க வேட்பாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், ‘கட்சியினர் வற்புறுத்தலினால் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறேன். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றால் முதல்வராகும் எண்ணமில்லை. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி தொடருவார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன். ஜெயலலிதா மக்களுக்கு செய்ய நினைத்த அனைத்து நலத்திட்டங்களையும் நிறைவேற்றுவேன். ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவேன். கருணாநிதி என்னும் தீய சக்தியிடம் இருந்து மக்களை காப்பதே அதிமுகவின் கடமை’, என்றார்.