ஆர்.கே. நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா இன்று வேட்பு மனு தாக்கல்

ஆர்.கே. நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா இன்று வேட்பு மனு தாக்கல்

திங்கள் , ஏப்ரல் 25,2016,

 முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 16ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு, கடந்த 22ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி துவங்கியது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மனு தாக்கல் இல்லை என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, இன்று மனு தாக்கல் செய்யும் பணி மீண்டும் துவங்குகிறது. வருகிற 29ம் தேதிவரை, வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

மறுநாள் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மே 2ம்தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசிநாள். அன்றைய தினம், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதனிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க .227 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் கூட்டணி கட்சிகள் 7இடங்களில் போட்டியிடும் என்றும் முதல்வர்  ஜெயலலிதா அறிவித்து வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார்.

அதன் பிறகு கடந்த 9ம்தேதியன்று சென்னை தீவுத்திடலில் முதல்வர் ஜெயலலிதா தனது பிரச்சாரத்தை துவக்கினார். அன்றைய தினம் தன்னையும் சேர்த்து 21 அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார். அதன் பிறகு விருத்தாசலம், தருமபுரி, அருப்புக் கோட்டை, சேலம், திருச்சி நகரங்களில் நடந்த பிரமாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். இன்று புதுச்சேரியில், முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார் . வருகிற 27ம் தேதி மதுரை மாநகரில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசுகிறார். இதனிடையே இந்த சூறாவளி சுற்றுப்பயணத்திற்கு மத்தியில் முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தனது வேட்புமனுவை காலையில் தாக்கல் செய்கிறார்.

இதேபோல மற்ற தலைவர்களும் ஓரிரு நாளில் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.