ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்ஷா நினைவு நாள் சுவரொட்டிகளால் திமுகவினர் கலக்கம்: கருத்து கூற ஸ்டாலின் மறுப்பு

ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்ஷா நினைவு நாள் சுவரொட்டிகளால் திமுகவினர் கலக்கம்: கருத்து கூற ஸ்டாலின் மறுப்பு

வெள்ளி, மார்ச் 18,2016,

மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்ப ரான பெரம்பலூர் ஏ.எம்.சாதிக் பாட்ஷாவின் 5-ம் ஆண்டு நினைவஞ்சலி நேற்று அனுசரிக் கப்பட்டது. இதையொட்டி அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன. தேர்தல் நேரம் என்பதால் திமுகவினர் மேலும் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.

பரபரப்பான 2-ஜி அலைக் கற்றை முறைகேடு தொடர்பாக ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, சாதிக் பாட்ஷாவும் சிபிஐ விசாரணைக்கு உள்ளானார்.

இந்நிலையில், 2011 மார்ச் 16-ல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தூக்குபோட்டுக் கொண்டு உயிரிழந்த சாதிக்பாட்ஷாவின் சடலம் மீட்கப்பட்டது. இதுவரை அவரது மர்ம மரணத்துக்கு விடை கிடைக்கவில்லை.

ஆண்டுதோறும் சாதிக்பாட்ஷா வின் நினைவு நாளில், அவரது குடும்பத்தாரும், நண்பர்களும் சேர்ந்து நலத் திட்ட உதவிகளை ஆர்ப்பாட்டமின்றி வழங்குவது வழக்கம். அவரது 5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. எனினும், பெரம் பலூரில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் காணப்பட்ட வாசகங்கள், திமுக வினருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தன.

‘இழைத்திடாப் பிழைக்காக இன்னுயிரை ஈந்தாயே’, ‘செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயே’ என்றெல்லாம் அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இதுகுறித்து பெரம்பலூரில் சாதிக்பாட்ஷாவின் நண்பர்கள் கூறும்போது, “ஆ.ராசா போன்ற பெரிய இடத்து நட்பு, அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. அவரது இழப்பை தாங்கமுடியாத நிலையில்தான், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திமுகவுக்கு எதிராக வாக்களிக்கும்படி முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் பிரச்சாரம் நடைபெற்றது. தற்போது, அவரது பெயரில் அறக்கட்டளை உருவாக்கி, அவரது நினைவு நாளில் ஆ.ராசா மற்றும் திமுக மீது மறை முகமாக பழி சுமத்தும் வகை யில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட் டுள்ளன. இது, திமுகவினரிடையே பெரும் மனக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இப்பகுதியில் வெற்றி வாய்ப்பை தீர்மானிப்பதில் முஸ்லிம்களின் வாக்குகளுக்கு முக்கியப் பங்கு உண்டு” என்றனர்.

இந்நிலையில் சாதிக் பாட்சா தற்கொலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கருத்து கூற மறுத்துவிட்டார்.