இணையம் மூலம் மணல் முன்பதிவு செய்யும் திட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

இணையம் மூலம் மணல் முன்பதிவு செய்யும் திட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

ஜூன் , 29 ,2017 ,வியாழக்கிழமை,

சென்னை : தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கு தேவையான மணலை பெற இணையத்தில் முன்பதிவு செய்யும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு போதுமான மணல் கிடைக்க ஏதுவாக, புதிய இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் தங்களுக்குத் தேவைப்படும் மணலை முன்பதிவு செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மணல் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குவாரிகளுக்கும், மணல் விற்பனை நிலையங்களுக்கும் வந்து நேரடியாக மணலை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான மணல் இணைய சேவை இணையதளத்தையும், TN Sand என்ற செல்லிடைப்பேசி செயலியையும் முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கிவைத்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட “தமிழ்நாடு மணல் இணைய சேவை” 1.7.2017 முதல் உபயோகிப்பாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், 1.7.2017 முதல் பொதுமக்கள், லாரிஉரிமையாளர்கள் தங்களுடைய மணல் தேவையை இணையசேவை மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ள முடியும். இதனால், உபயோகிப்பாளர்களின் மணல்தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன், மணல் தங்கு தடையின்றி குறைவான விலையில் கிடைக்கவும் வழிவகை ஏற்படும்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் கிரிஜாவைத்தியநாதன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் பிரபாகர், நீர்வளஆதாரத் துறைமுதன்மைத் தலைமைப் பொறியாளர் பக்தவத்சலம், மற்றும் அரசுஉயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.