இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி

இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி

சனி, டிசம்பர் 24,2016,

சென்னை ; அ.தி.மு.க. நிறுவனர் இதயதெய்வம் புரட்சித்தலைவர், எம்.ஜி.ஆரின் 29-வது ஆண்டு நினைவு நாளையொட்டி,சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சமாதிகளில்முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் கே.ராஜூ, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத் ஜெயகுமார், ஒ.எஸ்.மணியன், ஆர்.பி. உதயகுமார், டாக்டர் சி,விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, பெஞ்சமின், எம்.சரோஜா, வளர்மதி, ராஜலட்சுமி, நிலோபர் கபீல், பாண்டியராஜன், மற்றும் கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், இளைஞர் அணி செயலாளர் அலெக்சாண்டர் எம்,.எல்.ஏ மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த், இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, அண்ணாதொழிற்சங்க செயலாளர் சின்னசாமி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் கமலக்கண்ணன், ஆகியோர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அதிமுகவினர் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

எம்.ஜி.ஆர். சமாதியில் அஞ்சலி செலுத்திய பிறகு அவர்கள் அனைவரும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியிலும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நினைவகத்துக்கு வெளியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்றனர்.

தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் மத்தியில் உச்சரித்த ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்ற வாசகமும், தொண்டர்கள் உச்சரித்த ‘மக்களால் அம்மா, மக்களுக்காகவே அம்மா’ என்ற வாசகமும், இந்த முறை ‘மக்களால் அ.இ.அ.தி.மு.க., மக்களுக்காகவே அ.இ.அ.தி.மு.க.’ என்ற புது கோஷத்துடன் நேற்று முதல் ஒலிக்கப்பட்டது. இந்த கோஷ உறுதிமொழியும் படிக்கப்பட்டது.

உறுதிமொழி விவரம்…

*எம்.ஜி.ஆர். காட்டிய வழியில் ஒவ்வொரு நாளும் வாழ்ந்திடவும், அ.தி.மு.க.வுக்கு விசுவாசம் மிக்க தொண்டர்களாக, மறைந்த முதலமைச்சர்ஜெயலலிதாவின் புகழ்பாடும் தொண்டர்களாக பணியாற்றிடவும் இந்த நாளில் உறுதியேற்போம்.

*எம்.ஜி.ஆர். அளித்த மிகப்பெரிய கொடையாகிய அ.தி.மு.க. ஆயிரம் காலத்து பயிராக மக்களுக்கு தொண்டு ஆற்றும் என்று, தொலை நோக்கோடு அறிவித்தமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இதய ஒலி நிலைபெறும் வண்ணம், அ.தி.மு.க.வை கட்டிக்காக்க உறுதியேற்போம்.

*அ.தி.மு.க.வுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேர அல்லும் பகலும் தன் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் பாடுபட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வகுத்து கொடுத்த அரசியல் வியூகங்களை மனதில் கொண்டு, இனி வரும் காலங்களில் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபட இந்த நாளில் உறுதி ஏற்கிறோம். ஜெயலலிதா காட்டிய வழியில் கட்சியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றிட இந்த நாளில் நாங்கள் உறுதியேற்கிறோம்.

*காவிரி நதிநீர் பங்கீடு, முல்லை பெரியாறு, கச்சத்தீவு போன்றவற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்த ஜெயலலிதாவின் வழி நின்று தமிழ்நாட்டின் உரிமைகளை, எதிர்காலத்திலும் பாதுகாக்கும் வகையில் பணியாற்றிட இந்த நாளில் உறுதி ஏற்கிறோம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை மக்கள் மத்தியில் தொடர்ந்து எடுத்துரைத்திட தொடர்ந்து பாடுபடுவோம்.

*உள்ளாட்சி முதல் பாராளுமன்றம் வரை அ.தி.மு.க. தொண்டர்களை பல்வேறு பதவிகளில் அமர வைத்து மக்களுக்கு பணியாற்ற, அரிய வாய்ப்புகளை எளிய தொண்டர்களுக்கு அளித்திட்ட பொதுச்செயலாளர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. அவரின் பெருந்தன்மையும், மக்கள் பணிக்கு அவர் வகுத்த இலக்கணத்தையும் ஒரு போதும், மறவாமல், ‘மக்களால் அ.இ.அ.தி.மு.க., மக்களுக்காகவே அ.இ.அ.தி.மு.க.’ என்ற உணர்வோடு தொடர்ந்து பணியாற்றிட இந்த நாளில் உறுதி ஏற்கிறோம்.

*1½ கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களால் கட்டிக்காக்கப்பட்டு வரும் மாபெரும் இயக்கம் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் தியாகத்தால் இயங்கி வரும் அ.தி.மு.க.வை அவர்களின் உணர்வுகளை நன்கு உணர்ந்த, தலைமையை ஏற்று விசுவாசத்துடன் பணியாற்றிட இந்த நாளில் உறுதியேற்கிறோம்.

உறுதிமொழி ஏற்கப்பட்டதும் அ. தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைவரும் 2 நிமிடம் மவுனம் அனுஷ்டிக்கும்படி கூறினார். அதனை தொடர்ந்து அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.