இனி எந்த காலத்திலும் அ.தி.மு.க.விற்கு தோல்வி இல்லை: செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

இனி எந்த காலத்திலும் அ.தி.மு.க.விற்கு தோல்வி இல்லை: செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

வெள்ளி, ஜனவரி 01,2016,

இனி எந்த காலத்திலும் அ.தி.மு.க.விற்கு தோல்வி இல்லை என்று செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நேற்று காலை நடந்தது. முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா 10.45 மணிக்கு அரங்கத்திற்கு வந்தார். அதனை தொடர்ந்து அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மகளிரணி சார்பில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வீரவாள் மற்றும் மாலைகளை அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் வழங்கினர். அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆண்டறிக்கை வாசித்தார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

இன்னும் நான்கு மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கின்ற சூழ்நிலையில், இந்த பொதுக்குழு கூட்டம் இங்கே நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த 4லு ஆண்டுகளில் அளப்பரிய சாதனைகளை நாம் செய்திருக்கிறோம். அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய உண்மையான வளர்ச்சியை தமிழகம் எய்த வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கும் திட்டம், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் முதியோர் ஓய்வூதிய திட்டம், தாலிக்கு தங்கத்துடன் கூடிய ரூ.50 ஆயிரம் வரையிலான திருமண உதவித்திட்டம், கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், மலிவு விலையில் பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் வழங்கும் திட்டம், குறைந்த விலையில் காய்கறிகள் வழங்கும் திட்டம், அம்மா உணவகங்கள், அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா மருந்தகங்கள், அம்மா சிமெண்டு என பல்வேறு திட்டங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

இதேபோன்று கல்வி மற்றும் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கட்டணமில்லா கல்வி வழங்கும் திட்டம், விலையில்லா நோட்டு புத்தகங்கள், பாடப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், புத்தக பைகள், காலணிகள், மடிக்கணினி ஆகியவை வழங்கும் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு 12 ஆயிரம் உதவித்தொகை என எண்ணற்ற திட்டங்களை நமது அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்காரணமாக தான் இன்று கல்வி மற்றும் உடல்நலக்குறியீடுகளில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என்பதை நான் உங்களுக்கு பெருமையோடு சுட்டிக்காட்ட விழைகிறேன்.

அண்டை மாநிலங்கள் உடனான நதிநீர் பிரச்சினையை பொறுத்தவரையில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பினை சட்ட போராட்டத்தின் மூலம் மத்திய அரசிதழில் வெளியிட செய்த பெருமை நமக்கு உண்டு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது.

உங்களுடைய அரசு எடுத்த சட்டப்பூர்வ நடவடிக்கையின் விளைவாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியில் இருந்து 142 அடி வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சாதனை என்னால் தான் சாத்தியமாயிற்று என்பதை எவராலும் மறுக்க முடியாது.

கடந்த 4லு ஆண்டுகளில் வறட்சி நிலவிய 2012-ம் ஆண்டை தவிர மற்ற ஆண்டுகளில் ஆண்டுக்காண்டு உணவு தானிய உற்பத்தியில் புதிய சாதனைகளை நாம் படைத்து வருகிறோம். எனது அயராத முயற்சியின் காரணமாகவே மின்வெட்டு என்பது கொடுங்கனவாய் தீர்ந்து போனது.

அண்மையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2,42,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை நாம் ஈர்த்துள்ளோம். இதற்கு காரணம், தமிழ்நாட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலை, தடையில்லா மின்சாரம், பற்றாக்குறையில்லா குடிநீர், உறுதியான கட்டமைப்பு வசதிகள், எளிமையான அணுகுமுறை ஆகியவை தான் என்று சொன்னால் அது மிகையாகாது. மொத்ததில் குறை காண முடியாத அளவுக்கு நிறைவான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

எனவே தான், நம்மை எதிர்ப்பவர்கள், அதிலும் குறிப்பாக தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் தங்கள் கற்பனைக்கு தோன்றிய பொய்களை எல்லாம் கட்டவிழ்த்து; எப்படியாவது நமது அரசு மீது களங்கம் கற்பிக்க முயன்று வருகின்றனர்.

ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு. அந்த பெரிய வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்தான் ஒரு திருடன். வீட்டிற்குள் எல்லா இடங்களிலும் காவலுக்கு ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். இந்த வீட்டில் திருட முடியாது என்று நினைத்த திருடன் மெதுவாக அந்த வழியே திரும்ப ஆரம்பித்தான். அந்த சமயத்தில் அவனுடைய காலில் ஏதோ தட்டுப்பட்டது. சற்று குனிந்து பார்த்தான், ஒரு வெங்காய மூட்டை அங்கு இருந்தது. வந்ததற்கு இதையாவது எடுத்து செல்லலாம் என்று நினைத்து ஒரு பெரிய பை நிறைய வெங்காயத்தை அள்ளி போட்டுக்கொண்டான்.

புறப்படுகிற நேரத்தில் கப் என்று ஒரு கை வந்து விழுந்தது. ஆள் மாட்டிக்கொண்டான். மறுநாள் காவலாளிகள் அவனை அரசன் முன் சென்று நிறுத்தி நடந்ததை கூறினர். அரசனும் என்னப்பா இவர்கள் சொல்வது எல்லாம் உண்மை தானா? என்று கேட்டார். ஆமாம் என்று திருடனும் ஒத்துக்கொண்டான். உடனே அரசன் திருடனை பார்த்து நீ பண்ணையார் வீட்டில் திருட வந்தது குற்றம். அதற்காக ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் அல்லது 100 கசையடி வாங்க வேண்டும் இல்லையென்றால் திருடிய வெங்காயத்தை பச்சையாக என் கண் முன்னாடி சாப்பிட வேண்டும். இதில் எந்த தண்டனை உனக்கு வேண்டும்? என்று கேட்டார்.

சற்று சிந்தித்த திருடன், வெங்காயத்தை சாப்பிடுகிறேன் என்றான். வெங்காயத்தை ஒவ்வொன்றாக சாப்பிட ஆரம்பித்தான். கண்ணிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்து விட்டது. ஒரே எரிச்சல், தாக்கு பிடிக்க முடியவில்லை. இது நமக்கு சரிபட்டு வராது என்று முடிவு பண்ணி விட்டான். அரசரை பார்த்து என்னை மன்னித்து விடுங்கள். இது என்னால் முடியாது. பேசாமல் சாட்டை அடி கொடுத்து விடுங்கள் என்றான். அரசரும் சரி என்றார். சாட்டையடி விழ ஆரம்பித்தது. 10 அடிகள் விழுகிற வரைக்கும் தாங்கினான். அதற்கு மேல் அவனால் தாக்கு பிடிக்க முடியவில்லை. இதுவும் எனக்கு சரிபட்டு வராது. 100 ரூபாய் அபராதம் கட்டி விடுகிறேன் என்று கூறினான்.

இந்த கதையைப் போல, இப்போது முதல்-அமைச்சர் வேட்பாளர் என மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கும் ஒருவர், ஒவ்வொரு ஊராகச் சென்று ‘‘நாங்கள் தெரியாமல் செய்த தவறுகளை மன்னித்து விடுங்கள்; இனிமேல் இதுபோன்று எந்த தவறையும் செய்யமாட்டோம்’’ என்று பாவமன்னிப்பு கேட்டுள்ளார்.

இவர்கள் ஆட்சியில் செய்த தவறுகள் ஒன்றா இரண்டா? காவிரிப்பிரச்சினை; முல்லைப்பெரியாறு பிரச்சினை; டெல்டா மாவட்டங்களையே பாலைவனமாக்கும் மீத்தேன் எரிவாயுத் திட்டம்; நில அபகரிப்பு; சட்டம் ஒழுங்கு சீர் குலைவு; மின்சாரம் பற்றாக்குறையால் தமிழகத்தையே இருண்ட காலத்துக்கு கொண்டு சென்றது; இலங்கைத் தமிழர்கள் மடிய காரணமாயிருந்தது என இவர்கள் தமிழர்களுக்கு இழைத்த துரோகங்களை எல்லாம் மறந்து மன்னித்துவிட தமிழர்கள் என்ன ஏமாளிகளா!

அந்த நபர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அதற்கு ‘நமக்கு நாமே’ என்ற திருநாமத்தை சூட்டிக்கொண்டார். இந்த தலைப்பை அவரது தந்தை ஏன் கொடுத்தார் என்று அந்த நபர் சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார். கருணாநிதி தனது தனயனிடம் “இனி இந்த அரசை நம்பி பிரயோஜனம் இல்லை. நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள நமக்கு நாமே கடமையாற்ற வேண்டும்” என்று சொன்னாராம்.

அதாவது, அவர் சொல்வது என்னவென்றால் இந்த அ.இ.அ.தி.மு.க அரசு மக்களுக்கு பாதகமாக எதையும் செய்வதில்லை. எனவே, மக்களின் எதிர்ப்பை அவர்கள் சம்பாதித்துக் கொள்வார்கள் அதாவது, பதவியில் இருக்கும் அரசுக்கு எதிர்ப்பு என்ற சூழ்நிலை வரும் என இனியும் எதிர்பார்க்க முடியாது; எனவே நாம் வீதியில் இறங்கி நமது பொய் மூட்டைகளை அவிழ்த்து விட வேண்டும் என முடிவெடுத்து விட்டதாகத் தெரிவித்துள்ளார் போலும்!

இந்த பொதுக்குழு தீர்மானத்தின்படி, வரும் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு எனக்கு நீங்கள் முழு அதிகாரம் அளித்துள்ளீர்கள். ஒவ்வொரு தேர்தலிலும் அவ்வப்போது உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்தல் வியூகங்களை நான் அமைத்து வருகிறேன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

தேர்தல் களத்தில் வெற்றி பெற நாம் பல்வேறு உத்திகளை கடைபிடிக்க வேண்டும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் விதமாக நாம் உத்திகளை வகுக்க வேண்டும். தேர்தலை சந்திப்பதற்கு எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய உத்தி என்று எதுவும் கிடையாது. இந்த அடிப்படையில் தான் 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எதிர்கொண்டோம்.

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எதிர்கொண்டோம். 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் தனித்தே போட்டியிட்டு 37 இடங்களை வென்று, இன்று மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெயரை பெற்றுள்ளோம். அதேபோன்று, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப நான் சரியான முடிவை எடுப்பேன்.

மகத்தான வெற்றி

வரும் தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் தமிழக மக்களுக்கு சேவை புரிய ஆட்சி அமைத்திட வேண்டும். அதற்கு தொண்டர்களாகிய நீங்கள் இப்போதிருந்தே நம்மிடம் உள்ள வேற்றுமைகளைக் களைந்து களப்பணி ஆற்றிட வேண்டும். நமது அரசு ஆற்றியுள்ள அரும் பணிகள், ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் தெளிவாக நீங்கள் விளக்கிட வேண்டும்.

எதிர்க்கட்சிகள் நம் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் பொய்களை மக்கள் நம்பும்படி சொல்வார்கள். அவற்றை நீங்கள் உடனுக்குடன் முறியடிக்க உண்மை எது என்பதை மக்களுக்கு விளக்கிட வேண்டும். முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை மக்களுக்கு நினைவூட்ட வேண்டும்.

தனி வரலாறு

நமது எண்ணங்கள் தூய்மையானது; நமது செயல்கள் மக்கள் நலன் சார்ந்தது; எனவே நமது வெற்றியும் நிலையானது; உறுதியானது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்று நாம் அனைவரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதைப் போலவே, அ.தி.மு.க. உறுப்பினர்கள்; தொண்டர்கள் ஒவ்வொருவரும் கழக வீரன் என்பதைச் சொல்ல வேண்டும்; பெருமைப்பட வேண்டும். வீராங்கனை என்று சொல்ல வேண்டும்; பெருமைப்பட வேண்டும். இது சாதாரணமான இயக்கம் அல்ல. எத்தனையோ இயக்கங்கள் இருக்கலாம். எத்தனையோ கட்சிகள் இருக்கலாம்.

ஆனால், அ.தி.மு.க. என்னும் மக்கள் இயக்கத்திற்கு ஒரு தனி வரலாறு உண்டு. ஒரு தனி பெருமை உண்டு. இந்த இயக்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் அனைவரும் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும். நான் சொல்கிறேன்; இன்று சொல்கிறேன். எழுதி வைத்து கொள்ளுங்கள். இதுவரை இந்த இயக்கம் 6 முறை ஆட்சி அமைத்திருக்கிறது. தேர்தலில் வென்று எம்.ஜி.ஆர். தலைமையின் கீழ் 3 முறை ஆட்சி அமைத்துள்ளது.

இனி வெற்றி தான்

எனது தலைமையின் கீழ் 3 முறை ஆட்சி அமைத்துள்ளது. 6 முறை தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த இயக்கம் இது. நான் சொல்கிறேன். இனிமேல் அ.தி.மு.க.விற்கு வெற்றி தான்; என்றுமே வெற்றி தான். இனி எந்தக்காலத்திலும் தோல்வி இல்லை. வெற்றி தான். இனி எந்தக் காலத்திலும் சிறுமை இல்லை; பெருமை தான். இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.