இன்று ஈஸ்டர் திருநாள்: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

இன்று ஈஸ்டர் திருநாள்: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஞாயிறு, மார்ச் 27,2016,

அன்பின் திருவுருவான இயேசு பிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். இயேசு பிரான் போதித்த அன்பு, இரக்கம், பணிவு, ஈகை போன்ற உயரிய குணங்களை அனைவரும் பின்பற்றி தியாக உணர்வோடும், சகோதரத்துவத்தோடும், ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள ஈஸ்டர் திருநாள் வாழ்த்துச் செய்தியில், அன்பின் திருவுருவான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் தமது உளம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

“உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள், உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்” என்று போதித்த இயேசுபிரான், கொடியவர்களால் சிலுவையில் அறையப்பட்டு, உயிர்நீத்த தினம் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்பட்டு, உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள், ஈஸ்டர் திருநாளாக உலகெங்கும் வாழும் கிறிஸ்துவப் பெருமக்களால் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனைகள் செய்து பிறரோடு உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார்கள்.

இந்த நன்நாளில், உலகமெங்கிலும் அன்பும், அமைதியும் நிலவவும், மனிதநேயம் தழைக்கவும், இயேசுபிரான் போதித்த அன்பு, இரக்கம், பணிவு, ஈகை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி தியாக உணர்வோடும், சகோதரத்துவத்தோடும், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தமது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.