இன்று கிருஷ்ணஜெயந்தி திருநாள் ; முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

இன்று கிருஷ்ணஜெயந்தி திருநாள் ; முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

வியாழன் , ஆகஸ்ட் 25,2016,

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து,நேற்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

உயிர்களைக் காக்கும் பரந்தாமன் பகவான் மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

“அறம் பிறழ்கின்ற போது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்” என்றுரைத்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளில், குழந்தைகளைக் கிருஷ்ணனைப் போல் அலங்கரித்து, வீட்டின் தலைவாசலிருந்து பூஜை மண்டபம் வரை ஸ்ரீபாதம் எனப்படும் குழந்தையின் பிஞ்சு பாதங்களை மாவில் நனைத்து பதிய வைத்து, கிருஷ்ணருக்கு விருப்பமான பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள், சீடை, முறுக்கு போன்ற பலகாரங்களைப் படைத்து, இறைவனை பக்தியுடன் வணங்கி, ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

அனைத்து உயிர்களிடத்தும் நட்பும், கருணையும் உடையவனாய், நான், எனது என்ற பற்று நீங்கி, இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் கொண்டு, பொறுமையுடனும், மகிழ்ச்சியுடனும், இறைவனிடத்தில் மனதையும், மதியையும் அர்ப்பணித்து வாழ்ந்திட வேண்டுமென்ற கீத உபதேசத்தை மக்கள் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் தழைத்தோங்கும் என்பதனைத் தெரிவித்து, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.