இன்று திருச்சியில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா 19 அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி எழுச்சியுரையாற்றுகிறார்

இன்று  திருச்சியில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா 19 அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி எழுச்சியுரையாற்றுகிறார்

சனி, ஏப்ரல் 23,2016,

முதல்வர் ஜெயலலிதா இன்று  திருச்சியில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் 19 அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி எழுச்சியுரையாற்றுகிறார்.

கடந்த 9-ம் தேதி அன்று சென்னை தீவுத்திடலில் முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். இங்கு லட்சோபலட்சம் மக்கள் ஜெயலலிதாவின் எழுச்சியுரையை கேட்க திரண்டிருந்தனர். எதிர்பார்த்ததைவிட அதிக அளவு கூட்டம் வந்தது. தீவுத்திடலில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தான் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதி உட்பட 20 தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி எழுச்சியுரையாற்றினார்.

இதனையடுத்து 2–வது நாள் விருத்தாசலத்தில் 13 தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

3-வது நாள் பிரச்சாரம் 13–ம் தேதி அன்று தர்மபுரியில் நடந்தது. இங்கு 11 தொகுதிகளின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார். 4-வது நாள் பிரச்சாரத்தை அருப்புக்கோட்டையில் துவக்கினார். இங்கு 14 தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி எழுச்சியுரை ஆற்றினார். 5-ம் நாள் பிரச்சாரம் காஞ்சிபுரத்தில் நடந்தது. இங்கு 18 தொகுதிகளின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.  இதனையடுத்து 6–வது நாள் பிரச்சாரம் சேலத்தில் நடந்தது. இங்கு சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 46 வேட்பாளர்களையும், கேரள மாநிலத்தில் அ. தி.மு.க. சார்பில் போட்டியிடும் 7 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி ஜெயலலிதா பேசினார்.

அதனையடுத்து இன்று திருச்சியில் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் நடைபெறும் பிரமாண்டமான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மாலை 5 மணிக்கு ஜெயலலிதா எழுச்சியுரை ஆற்றுகிறார்.

இதையட்டி சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று மாலை திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். அதைதொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொன்மலை ஜி கார்னர் மைதானத்திற்கு வந்து சேர்கிறார். பின்பு முதல்வர் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இந்த கூட்டத்தில் திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி), அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை, கந்தர்வகோட்டை (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 19 தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார்.

முதல்வர் ஜெயலலிதாவின் எழுச்சியுரையை கேட்க லட்சோபலட்சம் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். தேர்தல் பிரச்சார கூட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் எந்தவித சிரமமும் இன்றி முதல்வர் ஜெயலலிதாவை காணவும், அவரது பேச்சை கேட்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  முதல்வர் ஜெயலலிதா பேச இருக்கும்  பொதுக்கூட்ட மேடை பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. மேடை முகப்பில் அமைதி, வளம், வளர்ச்சி என்ற வாசங்கங்கள் இடம் பெற்றுள்ளது. பொதுக்கூட்ட திடலில் ஆண்கள் பெண்கள் அமர தனித்தனி பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பொதுக்கூட்டத்தை காண 1 லட்சம் பேர் அமரும்வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. பொன்மலை ஜி கார்னர் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. கொடிகள் பட்டொளி வீசி பறக்கின்றது.

முன்னதாக இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியையட்டி வரலாறு காணாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சி போலீஸ் கமிஷனர் தலைமையில் ஏராளமான போலீசார்கள் பொதுக்கூட்ட திடலில் குவிக்கப்படவுள்ளார்கள். பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்க திருச்சி மாநகர், புறநகர், புதுக்கோட்டை, கரூர் மாவட்ட அ. தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த கூட்டத்தில் சுமார் 3 லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தொழில்துறை அமைச்சரும், நாமக்கல் மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், டி.பி.பூனாட்சி, சுப்பிரமணியன், அரசு தலைமை கொறடாவும், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான ஆர்.மனோகரன், மாவட்டச் செயலாளர்கள் டி.ரத்தினவேல் எம்.பி., வைரமுத்து எம்.எல்.ஏ., மக்களவை உறுப்பினர்கள் பி.குமார், ஆர்.பி.மருதைராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.